உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவில நிகழ்ச்சியிலே மகரஜோதியை காண்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
இந்த நிலையில், புகழ்பெற்ற மகரஜோதி இன்று நடக்கிறது. மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவாபரணங்கள் எனப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டது.
ராஜபந்தள குடும்பத்தினர் தலைமையில் கொண்டு வரப்படும் இந்த திருவாபரண ஊர்வலம் இன்று மாலை 6.20 மணிக்கு சன்னிதானம் கொண்டு வரப்படும். அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும், இதற்கு முன்பு, திருவாபரண ஊர்வலம் பம்பையை நெருங்கும் நேரத்தில் மகர விளக்கு நாளான இன்று மதியம் 12.29 மணியளவில் மகர சங்கிரம பூஜை நடக்கிறது.
மகரசங்கிரம பூஜை நடைபெற்ற பிறகு 3 மணிநேரம் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை நடை திறக்கப்படும். திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, திருவாபரணங்கள் பதினெட்டாம்படி வழியாக கொண்டு செல்லப்படும். பின்னர், தங்க ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
மகரவிளக்கு மற்றும் மகரஜோதி பூஜையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகரஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற உள்ள இந்த மகரஜோதி பூஜைக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பந்தள ராஜகுடும்பத்தைச் சேர்ந்த சங்கர்வர்மா தலைமையில் வரும் திருவாபரண ஊர்வலம் ஐய்யப்பனின் பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக பம்பை கணபதி கோவிலை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்