அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்! இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக அனுசரிக்கின்றது. இந்த வருடம் இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 1950 வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்முறைக்கு வரவில்லை. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவு குழுவுக்குத் தலைமையேற்றார். இதையடுத்து 1949ல் இந்தியா அரசியல் சாசன நிர்ணய சபை சாசனத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையேதான் 26 ஜனவரி குடியரசு தினமாக நாடெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினக் கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாகப் பார்க்கபடுவது டெல்லி ராஜப்பாட்டையில் இருந்து இந்தியா கேட் வரை செல்லும் வருடாந்திரப் பேரணிதான். இன்றைய தினத்தில் குடியரசுத் தலைவர் ராஜபாதையில் கொடியேற்றுவார். இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய பண்பாடு மற்றும் சமூக பாரம்பரியங்களின் அணிவகுப்பு, இந்திய ராணுவத்தின் வான் வெளி சாகசங்கள் ஆகியன இடம் பெறும்.
இதுதவிர இதே நாளில்தான் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ , பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கௌரவிப்பார். வீர தீர செயல்களுக்கான பரம்வீர் சக்ரா விருது, அசோக சக்ரா விருது, வீர் சக்ரா விருது ஆகியவை வழங்கப்படும்.
ஜனவரி 26, 1950ல் தான் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. அதனை வரைவு செய்யும் அரசியல் சாசன நிர்ணய சபை 9 டிசம்பர் 1946 ல் கூடியது. அதன் இறுதி கூட்டம் 26 நவம்பர் 1949ல் முடிவடைந்தது. அதற்கு அடுத்த சில காலத்திலேயே அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
குடியரசு தினம் என்பது இந்தியாவின் சுதந்திர உணர்வை பறைசாற்ற அனுசரிக்கப்படுவது. இதே நாளில்தான் 1930ல் இந்தியாவை பூரண சுதந்திரம் (Purna Swaraj)பெற்ற நாடாக இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்துத் தீர்மானம் இயற்றியது. ஒவ்வொரு இந்தியக் குடியும் தங்களது அரசை ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றிருப்பதையும் இந்த நாளில் நாம் அனுசரிக்கின்றோம். அந்த வகையில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம் என பல்வேறு முக்கிய மாநிலங்களின் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் இந்தக் குடியரசு தினம் கூடுதல் சிறப்புடையதாகிறது. ஆட்சியாளர்களைப் பொறுப்புணர்வோடு தேர்ந்தெடுப்போம்.,குடியரசைப் போற்றுவோம்!