கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நான்கு நபர்களுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 வயதுடைய தனியார் மருத்துவ செவிலியருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்த நபர்கள் 5 ஆக உயர்ந்துள்ளது. 



கேரளா மாநிலத்தில் கோழிக்கோட்டில் கடந்த மாதம் இரண்டு பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதன்பின் இருவரின் மருத்துவ பரிசோதனை சான்றிதழில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்துனரை தனி வார்ட்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 76 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் தயாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.


நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் தீவிர சுகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த சிறுவனுக்கு ஆண்டி வைரல் மருந்தை செலுத்த ஐ.சி.எம்.ஆர் இடம் கோரிக்கை முன்வைத்துள்ளது கேரளா அரசாங்கம். 


அதாவது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க  ஐசிஎம்ஆரிடம் இருந்து மோனோக்ளோனல் ஆன்டிபாடியை கேரள அரசு ஆர்டர் செய்துள்ளது. நிபா வைரஸ் தொற்றுக்கு இருக்கும் ஒரே மருந்து இதுவே ஆகும். இதுவரை நிபா வைரஸுக்கான தடுப்பூசி  பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மாநிலத்தில் காணப்படும் வைரஸ் திரிபு பங்களாதேஷ் மாறுபாடு என்றும் இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மையுடைது என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த வகையில் இறப்பு விகிதம் என்பது அதிகம் என கூறுகின்றனர்.  மேலும் தனிமைப்படுத்தப்பட்ட 76 நபர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இவர்களின் இரத்த மாதிரியும் சுழற்சி முறையில் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், மாதிரிகள் அனைத்தும் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிபா தொற்று பரவல் காரணமாக செப்டம்பர் 24 ஆம் தேதி வரை மக்கள் கூட்டமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிபா வைரஸ் பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளித்த 156 மருத்துவ பணியாளர்கள் முறையான பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடித்ததால் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களுக்கு நிபா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.


 மூளையை பாதிக்கும் வைரஸால் இருவர் உயிரிழந்த நிலையில் நிபா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்க கேரள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் ஆத்தஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூர், குட்டியடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிழும்பாறை  ஆகிய பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்தார்.  அங்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மருந்தகத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட கூடாது என உத்தரவிட்டுள்ளார்.