மும்பையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் முழு அட்டவணையை இந்திய கூட்டணி நேற்று வெளியிட்டது. இந்த கூட்டமானது (இன்று) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மும்பையில் உள்ள கிராண்ட் ஹயார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.


இந்திய கூட்டணி:


நேற்று வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, ஆகஸ்ட் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) அகில இந்திய கூட்டணியில் பங்கேற்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மும்பை சென்றடைவார்கள். அவர்கள் அனைவரையும் மாலை 6 முதல் 6:30 வரை வரவேற்கப்படுவார்கள்.


இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அனைத்துத் தலைவர்களும் முறைசாரா கூட்டம் நடத்துவார்கள். தொடர்ந்தும் நாளை இரவு 8 மணிக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தினை சிவசேனா UBT தலைவர் உத்தவ் தாக்கரே வழங்குவார் என்று கூறப்படுகிறது. 


சின்னம் வெளியீடு: 


இந்திய கூட்டணிக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியானது செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. மதியம் 1.15 மணிக்கு எதிர்க்கட்சி கூட்டணி கட்சி தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கும் இது 2 மணி வரை நடைபெறும். இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மதியம் 2 மணிக்கு மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்துள்ள மதிய விருந்தில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாலை 3.30 மணிக்கு இந்திய கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.


அட்டவணை விவரம்: 



  • ஆகஸ்ட் 31, மாலை 6 மணி - பிரதிநிதிகளின் வரவேற்பு

  • ஆகஸ்ட் 31, மாலை 6.30 மணி - முறைசாரா சந்திப்பு

  • ஆகஸ்ட் 31, இரவு 8 மணி - உத்தவ் தாக்கரே வழங்கும் இரவு உணவு

  • செப்டம்பர் 1, காலை 10.15 மணி - குழு புகைப்பட அமர்வு

  • செப்டம்பர் 1, காலை 10.30-பிற்பகல் 2 மணி - லோகோ வெளியீடு மற்றும் இந்திய கூட்டணி கூட்டம்

  • செப்டம்பர் 1, மதியம் 2 மணி - மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டி வழங்கும் மதிய உணவு

  • செப்டம்பர் 1, பிற்பகல் 3.30 - இந்தியக் கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு


யார் யார் பங்கேற்கிறார்கள்..? 


இந்தியா என்னும் எதிர்க்கட்சி கூட்டணியின் மும்பை கூட்டத்திற்கு 5 மாநில முதல்வர்கள் மற்றும் 26 கட்சிகளின் சுமார் 80 தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்வார் என தெரிகிறது. 


சரத் பவார் கலந்து கொள்கிறாரா..?


இன்று செய்தியாளர்களை சந்தித்த என்சிபி தலைவர் சரத் பவார், இந்திய (இந்தியா) கூட்டணி தலைவர்களின் கூட்டம் வியாழக்கிழமை முதல் மும்பையில் நடைபெற உள்ளது. இதில், இந்திய கூட்டணி கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளின் 63 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார். இதன்மூலம், இன்று மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் சரத் பவார் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.