Atrocities On Dalits: மத்திய பிரதேசத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை வாபஸ் பெறக் கோரி அவரது சகோதரரை அடித்துக் கொலை செய்த கும்பல், அவரது தாயாரை நிர்வாணப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
பாலியல் தொல்லை வழக்கு:
மத்திய பிரதேசத மாநிலம் சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்ரம் சிங் (28). கடந்த 2019ல், அதே பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இளம்பெண் அளித்த புகாரின்படி விக்ரம் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து, விக்ரம் சிங் ஜாமீனில் வெளிவந்தார். இதன்பின், தன் மீதுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டாயப்படுத்தி வந்துள்ளார் விக்ரம் சிங். இருப்பினும், அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் கடும் கோபத்தில் இருந்த விக்ரம் சிங், அவரது வீட்டிற்கு ஒரு கும்பலுடன் சென்றுள்ளார்.
அங்கு பாதிக்கப்பட்ட பெண், அவரது சசோதரர் மற்றும் தாய் இருந்துள்ளனர். மீண்டும் அவர்களிடம் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று விக்ரம் சிங் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததனர். இதனை அடுத்து, விக்ரம் சிங் மற்றும் அவருடன் சென்றவர்கள் வீட்டை சூறையாடி அங்கிருந்து சென்றுள்ளனர்.
நிர்வாணப்படுத்திய கொடூரம்:
இதனை பார்த்த மற்றவர்கள் வழக்கை வாபஸ் பெறும்படி கூறியுள்ளனர். இதற்கு அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மறுப்பு தெரிவித்தார். இதனை கேட்ட அந்த கும்பல் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதனை அவரது தாய் வந்து தடுக்க முயன்றபோது, அவரையும் தரதரவென இழுத்து, நிர்வாணப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவரது மகனை கொடூரமாக அடித்துவிட்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சகோதரர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 8 பேர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. "மத்தியப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாகி வருகிறது. தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் விகிதத்தில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தை தலித் அட்டூழியங்களின் ஆய்வகமாக பாஜக மாற்றியுள்ளது" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.