ஜி20 உச்சி மாநாடானது வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி புதுடெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் மாநில மற்றும் மத்திய அரசின் தலைவர்கள், பல்வேறு உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. அதிலும் முக்கியமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியா கிஷிடோ, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் அவுத் ஆகியோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த உச்சி மாநாட்டிற்கு தயாராகும் வகையில், டெல்லி அரசு நகரில் அமைந்துள்ள அமைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.


ஜி 20 என்றால் என்ன..? 


உலகின் சிறந்த மற்றும் டாப் 20 நாடுகளின் சங்கமம்தான் இந்த ஜி20 மாநாடு. ஒவ்வொரு ஆண்டும் 20 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டை தேர்ந்தெடுத்து, அங்கு 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 
ஜி 20 அல்லது ட்வெண்டி குழுவில் 19 நாடுகள் உள்ளன. அதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளன. 


கடந்த 1990 ம் ஆண்டு கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் மற்ற நாடுகளிலும் சிறிய அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதை சரி செய்யும் வகையில் 1990க்கு பிற்பகுதியில் அமைக்கப்பட்டதே ஜி 20 மாநாடு. 


முதல் ஜி20 மாநாடானது ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் 1999ல் நடத்தப்பட்டது. அப்போது ஜி 20 மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் மத்திய வங்கி தலைவர்கள் மட்டுமே சந்தித்து வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் ஒரு பொருளாதார  சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு நடந்த ஜி 20 மாநாட்டில் உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்துகொள்ள தொடங்கினர்.


ரஷ்ய அதிபர் புடின் வருகிறாரா..? 


டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி பிரதமர் மோடியிடம் பேசிய புடின், தான் வரமுடியாத சூழ்நிலை குறித்து தெரிவித்தார். மேலும், அவருக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


G20 உச்சிமாநாட்டின் முழு அட்டவணை:



  1. செப்டம்பர் 3-6: 4வது ஷெர்பா கூட்டம்

  2. செப்டம்பர் 5-6: நிதி பிரதிநிதிகள் கூட்டம்

  3. செப்டம்பர் 6: கூட்டு ஷெர்பாக்கள் மற்றும் நிதி பிரதிநிதிகள் கூட்டம்

  4. செப்டம்பர் 9 - 10: G20 உச்சி மாநாட்டில் அமைச்சர்கள் சந்திப்பு

  5. செப்டம்பர் 13-14: வாரணாசியில் 4வது நிலையான நிதி செயற்குழு கூட்டம்

  6. செப்டம்பர் 14 - 16: மும்பையில் நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மைக்கான 4வது கூட்டம்

  7. செப்டம்பர் 18 - 19: ராய்பூரில் 4வது கட்டமைப்பு பணிக்குழு கூட்டம்.


உறுப்பு நாட்டு தலைவர்கள் எங்கு தங்குகிறார்கள்..? 


ஆதாரங்களின்படி, அமெரிக்க அதிபர் பைடன் ஐடிசி மவுரியா ஷெரட்டனில் தங்குவார் என்று கூறப்படுகிறது. இதற்காக ஹோட்டலில் சுமார் 400 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஜனாதிபதி ஜின்பிங் தாஜ் அரண்மனையிலும், பிரதமர் சுனக் ஷாங்க்ரி-லா ஹோட்டலிலும், ஜனாதிபதி மக்ரோன் கிளாரிட்ஜஸ் ஹோட்டலிலும், பிரதமர் அல்பானீஸ் இம்பீரியல் ஹோட்டலிலும் தங்குவார்கள் என்றும் தெரிகிறது. டெல்லியில் உள்ள 23 ஹோட்டல்களும், என்சிஆர் பகுதியில் ஒன்பது ஹோட்டல்களும் ஜி20 பிரதிநிதிகளை நடத்தவுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.


மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா மற்றும் ஸ்பெயின் பிரதிநிதிகள் லு மெரிடியனில் தங்குவார்கள். சீன மற்றும் பிரேசிலிய பிரதிநிதிகள் தாஜ் அரண்மனையில் தங்குவார்கள், இந்தோனேசிய மற்றும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் இம்பீரியல் ஹோட்டலில் வைக்கப்படுவார்கள். இங்கிலாந்து மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் ஷங்ரி-லா ஹோட்டலிலும், இத்தாலிய மற்றும் சிங்கப்பூர் பிரதிநிதிகள் ஹையாட் ரீஜென்சியிலும் தங்க வைக்கப்படுவார்கள். அமெரிக்க பிரதிநிதிகள் மவுரியா ஷெரட்டன், ஓமன் பிரதிநிதிகள் லோதி ஹோட்டல், பிரெஞ்சு பிரதிநிதிகள் கிளாரிட்ஜஸ் ஹோட்டல் மற்றும் பங்களாதேஷ் பிரதிநிதிகள் குருகிராமில் உள்ள கிராண்ட் ஹயாட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள். 


G20 உச்சிமாநாடு 2023: லோகோ 


G20 லோகோ இந்தியாவின் தேசியக் கொடியிலிருந்து ஈர்க்கப்பட்டு, தாமரையின் இதழ்கள் போன்ற வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆரஞ்சு, வெள்ளை, பச்சை, நீல நிறங்கள் இடம்பெற்றுள்ளன. G20 லோகோவிற்கு கீழே, 'பாரத்' என்னும் வார்த்தை தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.