இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றையே இரண்டு அத்தியாயங்களாக பிரிக்கலாம். ஒன்று, 1850ஆம் ஆண்டுக்கு முன்பான காலம். அந்த காலக்கட்டத்தில்தான், விடுதலைக்கான முதல் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. 1850ஆம் ஆண்டுக்கு பிறகான காலத்தில் விடுதலைக்கான உணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து, அது பேரியக்கமாக மாறியது. 


இப்படி, இந்திய சுதந்திரத்திற்கு என நீண்ட வரலாறு உள்ளது. ஆனால், பெரும்பாலானோருக்கு சுதந்திர வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து தெரிவதில்லை. சுதந்திர வரலாற்றின் மகத்துவம் குறித்து முந்தைய தலைமுறையினர், அடுத்த தலைமுறையினருக்கு சொல்ல தவறவிட்டுவிட்டனர்.


இருந்தபோதிலும், நம் சுதந்திரம் குறித்து எண்ணிலடங்கா புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. சுதந்திரம் தினம் நெருங்கும் சூழலில் அத்தகைய புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். 


இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு:


இந்திய வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். நவீன இந்தியாவின் வரலாற்றை காந்திக்கு முன்பு, காந்திக்குப் பிறகு என்றுதான் பிரிக்கவேண்டியிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்ற கதை பலராலும் பல முறை சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் என்ன ஆனது, இன்றுள்ள நிலைக்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம் என்னும் கதையைக் கோர்வையாகவும் எளிமையாகவும் ஆழமாகவும் விவரிக்கும் நூல் நீண்ட காலம் எழுதப்படாமலேயே இருந்தது.  அந்தக் குறையைப் போக்கிய முக்கியமான படைப்பு ராமச்சந்திர குஹாவின் India After Gandhi (2007).


கிஷ்வர் தேசாய் எழுதியுள்ள 'ஜாலியன்வாலா பாக், 1919: தி ரியல் ஸ்டோரி


பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக அற வழியில் போராட மக்கள் குவிந்திருந்தனர். ஜெனரல் டயர் உத்தரவில் ஆங்கிலேய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள், அப்பாவி மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது. நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக மாறிய ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றிய இந்த புத்தகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? டயரின் கொடூரமான செயலுக்கு காரணம் என்ன என்பதை புத்தகத்தில் தெளிவாகி விளக்கியிருக்கிறார் கிஷ்வர் தேசாய்.


ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா'


இந்திய வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள மிகச் சிறந்த புத்தகமாக ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' கருதப்படுகிறது. நாட்டின் முதல் பிரதமரான நேரு, 1942 முதல் 1946 வரையில், தனது சிறைவாசத்தின்போது இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி ஆங்கிலேயர்கள் ஆட்சி வரையிலான வரலாற்றை தன்னுடைய தனித்துவமான அறிவாற்றலின் வழியாக விவரித்திருக்கிறார் நேரு.