இந்திய விடுதலை போராட்ட வரலாற்றையே இரண்டு அத்தியாயங்களாக பிரிக்கலாம். ஒன்று, 1850ஆம் ஆண்டுக்கு முன்பான காலம். அந்த காலக்கட்டத்தில்தான், விடுதலைக்கான முதல் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. 1850ஆம் ஆண்டுக்கு பிறகான காலத்தில் விடுதலைக்கான உணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து, அது பேரியக்கமாக மாறியது.
1850க்கு முன்பான காலக்கட்டத்தில், விடுதலைக்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி முந்தைய தொகுப்பில் பார்த்தோம். 1850க்கு பிறகான காலக்கட்டத்தில், சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
வ.உ. சிதம்பரனார்:
சுதந்திரமே எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்டு, இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர் பாலகங்காதர திலகர். அவருடைய வழியை தீவிரமாக பின்பற்றி. ஆங்கிலேய காலனியாதிக்கத்தை தமிழ்நாட்டில் எதிர்த்தவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவரை சிறையில் அடைத்தனர். அங்கு செக்கிழுத்த அவர், ஆங்கிலேயர்களின் சித்ரவதைக்கு ஆளாகினார். ஆங்கிலேயர்கள், அவரை கல்லுடைக்க வைத்தனர். கசையடிப்பட்டார். விடுதலைக்கான தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார்.
கடலூர் அஞ்சலையம்மாள்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகரில் கடந்த 1890ஆம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலை அம்மாள். ஐந்தாம் வகுப்பு வரையே படித்த இவர், சிறு வயது முதலே சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். கடந்த 1921ஆம் ஆண்டு, நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.
இதில் பங்கேற்றதன் மூலம், தென்னிந்தியாவில் இருந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தன்னுடையது என்று இல்லாமல் தனது குடும்பத்தினருக்கு என இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பெரும் பணத்தை செலவழித்தவர்.
சுப்பிரமணிய சிவா:
நாட்டு பற்றை ஆக்சிஜன் போல் சுவாசித்தவர் சுப்பிரமணிய சிவா. ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் பல இன்னல்களை அனுபவித்தார். சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. ஆனால், நோய் கொடுமையை கண்டுகொள்ளாமல் விடுதலை போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தவர் சுப்பிரமணிய சிவா.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியில் பிறந்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். சிறுவயதிலயே தந்தையை இழந்து, ஏழ்மை நிலையில் தவித்தபோதும் பள்ளிக் கல்வியை பல இன்னல்களுடன் முடித்தார். இதை தொடர்ந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், மதுரையில் பட்டம் முடித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். தான் சார்ந்த சமூக மக்களுக்காகவும் ஏழைகளின் நலனுக்காகவும் தொடர்ந்து இயங்கினார்.
காந்தியக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டார். கடந்த 1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு போராடியதால் பல ஆண்டுகள் சிறையிலே கழித்தார். இந்திய சுதந்திரம் பெற்ற பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றிருந்தவர் தன்னுடைய காதல் திருமணத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1950ஆம் ஆண்டே செய்து கொண்டார்.
சுப்பிரமணிய பாரதி:
தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையின் மூலம் முழங்கியவர் தேசிய கவி பாரதியார். இவர், ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் செயல்பட்டு நாட்டு மக்கள் மத்தியில் சுதந்திர உணர்வை விதைத்தார்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக முழங்கிய அதே சமயத்தில், “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து போர்க்குரல் எழுப்பினார்.
சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும், 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி , திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் மகனாக பிறந்தவர். பாரதியாருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி.
5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதையில் சிறந்து விளங்க தொடங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றில் இருந்து இவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்றானது.
ராஜகோபாலாச்சாரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் 1878ஆம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பிறந்த மூதறிஞர் ராஜாஜி, அண்ணல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாக்கிரகம் போராட்டத்தினை முன்னின்று நடத்தினார்.
கடந்த 1937ஆம் ஆண்டு, மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகவும் அதை தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநராகவும் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என நாட்டின் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். இலக்கியத்தில் ஆர்வம் மிக்க இவர் அரிய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். 1959 ஆம் ஆண்டு, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
என். சங்கரய்யா:
இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் என். சங்கரய்யா. கோவில்பட்டி நரசிம்மலு - ராமானுஜம் தம்பதியருக்கு மகனாக பிறந்த சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து சுந்திர போராட்டத்திற்காக கூட்டத்தை நடத்தினார். கடந்த 1938ஆம் ஆண்டு, இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தை தொடங்கினார்.
பின்னர், 1939ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக, அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டம், பின் 1941இல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியும், மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது தமிழ்நாட்டுக்காக குரல் கொடுத்தவர்.