ITR Filing: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


வருமான வரி தாக்கல்:





மாத ஊதியம் பெறுவோர், தொழில் முனைவோர், வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான விதி. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதி ஆண்டுக்கான வரி விவரங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் கிடையாது. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், வருமான வரி தாக்கல் செய்து விட்டால், அவர்களுக்கு சலுகைகளும் உண்டு.  2023 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கியுள்ளது. அதாவது இன்றுடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வாய்ப்பை தவறவிட்டால், நாளை முதல் சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


6 கோடி பேர் தாக்கல்:


இதுவரை 6 கோடிக்கு மேற்பட்ட வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், நேற்று ஒரே நாளில் மாலை 6.30 மணி வரையில் 26 லட்சத்து 76 ஆயிரம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஏற்கனவே முறியடிக்கப்பட்டுள்ளது. கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ வருமான வரி உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கி வருவதாக வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.


அபராதம் மற்றும் சிறைவாசம்:


ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய தவறினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், ஒருவரது வருமானம் 5 லட்சத்திற்கும் மிகாமல் இருந்தால் அவர் 1,000 ரூபாய்  மட்டும் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு நபர் 25 லட்சத்திற்கும் அதிகமான வரியை செலுத்த வேண்டி இருந்தால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.  மேலும் வரியை செலுத்தும் வரை அந்த தொகைக்கு ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் வட்டியும் வசூலிக்கப்படும்.


எந்த ஐடிஆர் படிவம் தாக்கல் செய்ய வேண்டும்?



  • ஆண்டு சம்பளம், வீடு உள்ளிட்ட சொத்து, பிற முதலீடுகள் மூலம் கிடைக்கும் வட்டி உள்ளிட்ட மொத்த வருமானம் ரூ.50 லட்சம் வரை உள்ளவர்கள் ஐடிஆர் 1 தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • எந்தவொரு வணிகள் அல்லது தொழிலை மேற்கொள்ளாத தனிநபர்கள் ஐடிஆர் 2 தேர்ந்தெடுக்க வேண்டும். 

  • வணிகம் அல்லது தொழில் மூலமாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர் 3 படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • ஐடிஆர்4, சிறிய மற்றும நடுத்தர வரி செலுத்துவோர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் எளிய வரி தாக்கல் படிவமாகும். இதை தனிநபர்கள், HUF, நிறுவனங்கள் பயன்படுத்தலாம். 

  • LLP மற்றும் வணிக அமைப்புகள் ஐடிஆர் 5 பயன்படுத்தலாம். 

  • ஐடிஆர் 6 படிவத்தை நிறுவனங்களால் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.


தேவையான ஆவணங்கள்:


வங்கி கணக்கு விவரங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு, சம்பளம் பெறும் நபர்களுக்கான படிவம் 16, முதலீட்டு குறித்த, ஆதாரங்கள், வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திய ரசீதுகள் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.