கடந்த 1947ஆம் ஆண்டு, டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் இந்திய அரசியல் நிர்ணய சபை கூடியபோது, சுதந்திர இந்தியாவுக்கான தேசிய கொடியை ஏற்று கொள்வது தொடர்பான தீர்மானம்தான் விவாதத்திற்கு முதிலில் எடுத்து கொள்ளப்பட்டது. "ஆரஞ்சு (கேசரி), வெள்ளை, கரும் பச்சை ஆகிய மூவர்ணத்தில் இந்திய தேசிய கொடி இருக்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


வெள்ளை நிறத்தின் மீது நீள நிறத்தில் ராட்டை சின்னம் பொறிக்கப்பட வேண்டும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பின்னாட்களில், ராட்டைக்கு பதிலாக அசோக சக்கரத்தில் உள்ள சக்கரம் பொறிக்கப்பட்டது. கொடியின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் நீண்ட விவாதம் நடைபெற்றது. இறுதியாக, தற்போது நம் பயன்பாட்டில் இருக்கும் கொடி வடிவமைக்கப்பட்டு, கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் தேதி செங்கோட்டையில் முதல் பிரதமர் நேருவால் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.


பல ஆண்டு வரலாற்றை கொண்ட தேசிய கொடி கடந்து வந்த பாதையை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


கடந்த 1904 முதல் 1906க்கு இடைப்பட்ட காலத்தில், அயர்லாந்து நாட்டை சேர்ந்த சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதாவால் இந்தியக் கொடி வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் தேசியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கொல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்த முதல் கொடியானது, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று நிறங்களை கொண்டிருந்தது. நடுவில் வந்தே மாதரம் என எழுதப்பட்டிருந்தது. சுதந்திர போராட்ட வீரரான சசீந்திர பிரசாத் போஸ் மற்றும் ஹேமச்சந்திர கனுங்கோ ஆகியோராலும் இந்த வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பச்சை நிறத்தின் மீது எட்டு தாமரை சின்னங்களும் சிவப்பு நிறத்தின் மீது பிறைநிலா சின்னமும் சூரிய சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது.


இதற்கு அடுத்த ஆண்டே, 1907ஆம் ஆண்டு, மேடம் காமா மற்றும் நாடுகடத்தப்பட்ட புரட்சியாளர்கள் குழு, ஜெர்மனியில் இந்தியக் கொடியை ஏற்றினர்.  வெளிநாட்டு மண்ணில் இந்திய கொடியை ஏற்றுவது அதுவே முதல்முறை. கடந்த 1917 ஆம் ஆண்டு, டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் லோகமான்ய திலகர் ஆகியோர் தன்னாட்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக புதிய கொடியை ஏற்றுக்கொண்டனர். 


மூவர்ண கொடியின் வரலாறு:


மூவர்ண கொடியை வடிவமைத்ததில் முக்கிய பங்கை ஆற்றியவர் பிங்கலி வெங்கய்யா. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியை இரண்டாவது ஆங்கிலோ-போயர் போரின் போது (1899-1902) முதல்முறையாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது.  பிரிட்டிஷ் இந்திய ராணுவ அதிகாரியாக வெங்கய்யா அங்கு பணியாற்றி வந்தார்.


பல வருட ஆராய்ச்சிக்கு பிறகே, தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கொடியின் வடிவமைப்பு எப்படி எல்லாம் இருக்கக்கூடும் என்பது குறித்து, கடந்த 1916ஆம் ஆண்டு, புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார் வெங்கய்யா. கடந்த 1921ஆம் ஆண்டு, பெஸ்வாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில், வெங்கையா மீண்டும் காந்தியைச் சந்தித்து, கொடியின் அடிப்படை அம்சம் குறித்து எடுத்துரைத்துள்ளார்.


முதலில், இரண்டு சிவப்பு பட்டை மற்றும் ஒரு பச்சை பட்டையால் ஆன கொடியையே  வெங்கையா வடிவமைத்திருந்தார். இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என இரண்டு பெரிய சமூகங்களை அடையாளப்படுத்த இந்த வண்ணத்தில் கொடியை வடிவமைத்திருந்தார். ஆனால், அமைதி மற்றும் இந்தியாவில் வாழும் மற்ற சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வெள்ளை பட்டையையும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அடையாளமாக நடுவில் ஒரு சுழலும் சக்கரத்தையும் சேர்க்க வேண்டும் என்று காந்தி பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.


கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, 1931இல் காங்கிரஸ் கமிட்டி கராச்சியில் கூடி, மூவர்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டது வரை கொடியின் வடிவமைப்பில் பல மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டன. சிவப்புக்குப் பதிலாக குங்குமப்பூவைக் கொண்டு வண்ணங்களின் வரிசை மாற்றப்பட்டது. அதேபோல, எந்த ஒரு மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாத வகையில் கொடி வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மூவர்ணக் கொடியில் உள்ள குங்குமப்பூ (ஆரங்சு) வண்ணம் வலிமை மற்றும் துணிவை குறிக்கிறது. நடுவில் உள்ள வெள்ளை "அமைதி மற்றும் உண்மையை" குறிக்கிறது. கீழே உள்ள பச்சை "மண்ணின் வளம், வளர்ச்சி மற்றும் புனிதத்தை" குறிக்கிறது.


தேசிய கொடியை சுற்றும் சர்ச்சைகள்:


கடந்த 2013ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் பிறந்த சுரய்யா தியாப்ஜி என்ற இஸ்லாமிய பெண்தான், தேசியக் கொடியை வடிவமைத்ததாக வரலாற்றாசிரியர் பாண்டுரங்க ரெட்டி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கொடியை வடிவமைத்தவர்களின் விவரங்கள் எதுவும் குறிப்பிடாத காரணத்தால், கொடி தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.


கொடியின் இறுதி வடிவத்தில் ராட்டைக்கு பதிலாக அசோக சக்கரத்தை பரிந்துரைத்தது யார் என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் இல்லை. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு, தஸ்கர் என்ற கைவினைத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரான லைலா தியாப்ஜி, தேசிய கொடி தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது பெற்றோர்களான பத்ருதீன் மற்றும் சுரய்யா தியாப்ஜி ஆகியோர்தான், ராட்டைக்கு பதிலாக அசோக சக்கரத்தை பரிந்துரைத்தது என குறிப்பிட்டிருந்தார்.