உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அந்த மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப அங்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் அரங்கேறி வருகிறது.
போலீஸ் எஸ்.ஐ.:
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவல்துறையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளரே சாலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் முக்கியமான நகரம் ஃபிரோசாபாத். இந்த நகரத்தில் அமைந்துள்ளது ஆரோன் காவல் நிலையம்.
இந்த காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தினேஷ்குமார் மிஸ்ரா. இந்த நிலையில், இவரது காவல் நிலையத்தில் தினசரி ஏராளமான புகார்கள் விசாரணைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், வரதட்சணை புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக அருகில் உள்ள சந்த்புர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு சந்த்புர் கிராமத்தில் விசாரணையை முடித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
நடுரோட்டில் சுட்டுக்கொலை:
தினேஷ் மிஸ்ரா இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வர, அவருக்கு பின்னால் அவருடன் பணியாற்றும் தீரஜ் ஷர்மா அமர்ந்து வந்துள்ளார். அப்போது, திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தினேஷ் மிஸ்ராவை துப்பாக்கியால் சுட்டார். தினேஷ் மிஸ்ராவின் கழுத்தில் குண்டு பாய்ந்ததில் அவரும், தீரஜ் சர்மாவும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். கழுத்தில் குண்டு பாய்ந்த தினேஷ் மிஸ்ரா ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். உயிரிழந்த தினேஷ் மிஸ்ரா ஆக்ராவைச் சேர்ந்தவர்.
மக்கள் அச்சம்:
தினேஷ் மிஸ்ராவை சுட்டுக்கொலை செய்தது யார்? அவர் எதற்காக தினேஷ் மிஸ்ராவை சுட்டார்? என எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் உதவி ஆய்வாளரையே அடையாளம் தெரியாத நபர் நட்ட நடுரோட்டிலே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Crime: அடக்கொடுமையே! மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்; கோபத்தால் வெறிச்செயல்...பெங்களூருவில் ஷாக்!
மேலும் படிக்க: விழுப்புரத்தில் பரபரப்பு .... 475 ஆண்டுகள் பழமையான கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு