உலக வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், அதில் சிலதுதான் பிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, வரலாற்று நிகழ்வாக பதிவாகியிருக்கிறது. அந்த வகையில், அமெரிக்கா சுதந்திரம் பெற்றதையும், பிரெஞ்சுப் புரட்சியையும், ரஷியாவில் தோன்றிய சமூக எழுச்சியையும் குறிப்பிடலாம். ஆனால், அந்தச் சம்பவங்களை எல்லாம் காட்டிலும் இந்தியா சுதந்திரமடைந்த சம்பவமே உலகத்தில் மகத்தான நிகழ்வாக குறிப்பிடப்படுகிறது.


இந்திய சுதந்திரத்திலிருந்து உலகின் எதிர்காலம் நம்பிக்கையளிக்கக் கூடிய தன்மையைப் பெற்றதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வரும் 15ஆம் தேதி, இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளை நிறைவு செய்து, 77ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல போராட்டங்களுக்குப் பின், நாம் அடைந்த சுதந்திரத்தின் வெற்றியை முதல் சுதந்திர தினத்தில் வாழ்ந்த இந்தியர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.


இறக்கப்பட்ட யூனியன் ஜாக் கொடிகள்:



கொல்கத்தாவின் வில்லியம் கோட்டை, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை உட்பட பல முக்கிய இடங்களில் யூனியன் ஜாக் கொடிகள் மாலையில் இறக்கப்பட்டன. பல்வேறு முக்கிய ஆவணங்கள் மவுண்ட் பேட்டனின் மேசையில் இரவு 11.58க்கு வைக்கப்பட்டது. அதில், அவர் இறுதிக் கையெழுத்தினையிட்டார்.  இதை தொடர்ந்து, வைஸ்ராயின் மாளிகையிலிருந்தும் ஜாக் கொடி இறக்கப்பட்டது. 





ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, மைய மண்டபத்தில் ராஜேந்திர பிரசாத் தலைமையில் 11 மணிக்கு கூட்டம் கூடியது. பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் சுதேசா கிருபளானி வந்தேமாதரம் பாடலை பாடினார். இரு நிமிடம், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு, வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார்.


"நீண்ட நெடுங்காலத்துக்கு முன் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்" என தெரிவித்தார். இதை தொடர்ந்து, இந்திய விடுதலை தொடர்பான தீர்மானத்தை நேரு முன்மொழிந்தார். செளத்ரி காலிக்-உஸ்-மான் வழிமொழிந்தார்.