உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது நொய்டா. இந்த நகரத்தில் செக்டார் 110 பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து மிகுந்த காணப்படும். இந்த நிலையில், இந்த சாலையில் பெண் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே சாலையில் இ – ஆட்டோ எனப்படும் மின்னனு ஆட்டோவை ஒரு நபர் ஓட்டி வந்தார்.
அப்போது, அவரது ஆட்டோ அந்த பெண்ணின் காரை உரசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அந்த நபரின் சட்டையைப் பிடித்து கார் அருகே தரதரவென இழுத்து வந்தார்.
இழுத்து வந்தது மட்டுமின்றி, அவரின் அனுமதியின்றி அவரின் சட்டைப் பையில் இருந்த பணம் முழுவதையும் பறித்துக்கொண்டார். மேலும். “உனது அப்பன் வீட்டு கார் ஆ..?” என்று ஆவேசமாக கேட்டார். அந்த ஆட்டோ ஓட்டுநரை தரக்குறைவாக பேசியதுடன் அவரது கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்தார். சுமார் ஒன்றரை நிமிடத்திற்குள் மட்டுமே 17 முறை அந்த ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் அந்த பெண் அறைந்தார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் மீது 323வது பிரிவு, 504வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய அந்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்