‛ஐடி ரெய்டு’ என்கிற வார்த்தையை அறியாத தமிழக மக்களே இருக்க முடியாது. பலர் அதை அரசியலோடு ஒப்பிட்டதாலோ என்னவோ, குக்கிராமத்தில் துவங்கி பெருநகரம் வரை ஐடி ரெய்டு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வருமான வரித்துறையால் நடத்தும் சோதனை தான் ஆங்கிலத்தில் ஐடி ரெய்டு எனப்படுகிறது. கட்டு கட்டாக, கத்தை, கத்தையாக பணம் பறிமுதல், கிலோ கணக்கில், டன் கணக்கில் தங்கம் பறிமுதல் என செய்தியை படிக்கும் போதே பலருக்கும் எழும் எண்ணம், ‛இதையெல்லாம் என்ன பண்ணுவாங்க?’ என்பது தான்.




இப்போது தேர்தல் சீசன். கட்சி பாரபட்சமின்றி அனைத்து தரப்பினர் வீடுகளிலும் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. பணமும், நகையும் முன்பு குறிப்பிட்டதைப் போல் கத்தை, கத்தையாக பிடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எவ்வாறு இந்த ரெய்டு நடைபெறுகிறது? கைப்பற்றப்படும் பணம் எங்கே செல்கிறது? என்ன ஆகிறது? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கான பதில் தான் இந்த தொகுப்பு.




 வருமான வரி சோதனையில் இரண்டு வகை உண்டு. தேர்தல் நேரத்தின்போது வாகனங்களிலோ மற்ற இடங்களிலோ அதிகாரிகளால் பிடிபடுகிற பணம். இந்தப் பணம், அந்தந்த மாநிலத்தின் கருவூலத்துக்குக் கொண்டு செல்லப்படும். அதன் பின் அந்த தொகை குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.  அதன் பின் அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள்.


மற்றொன்று குறிப்பிட்ட நபரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்வது. இந்த வகை ரெய்டு செய்ய அதிகாரிகள் கொஞ்சம் மெனக்கெடுவார்கள். முழுமையான ஆவண தயாரிப்பும், குழு தயாரிப்புக்கு பிறகே அந்த ரெய்டு நடைபெறும். அதுவும் முறையான வாரண்ட் பெற்று, முறையாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடைபெறும்.


 


முதலில் சம்மந்தப்பட்டவரிடம் தங்களை அறிமுகப்படு

த்திக் கொண்டு சோதனை பற்றிய விளக்கங்களைக் கூறி தெளிவுபடுத்திக்கொள்வார்கள். பின் அந்த இடத்தில் தேவையான மருத்துவ சேவையை ஏற்படுத்திக் கொள்வர்.  அலைபேசி, தொலைபேசி என அனைத்து தகவல்தொடர்பு சாதனங்களையும் துண்டித்த பின்பாக சோதனையிடத் தொடங்குவார்கள்.


ரொக்கம், நகை, பத்திரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைச் சோதனையிட்டு அங்கிருப்பவர்களின் வாக்குமூலம் மற்றும் சரியான ஆவணங்கள், ஆவணங்கள் இல்லாத  ரொக்கம் மற்றும் இதர பொருள்களைப் பறிமுதல் செய்வது அதன் வழக்கம். இதுவரைக்குமான தகவலைத்தான் வருமான வரித்துறை மீடியாக்கள் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்துகிறது. பிடிபடும் பணமோ அல்லது தங்கமோ என்ன ஆகிறது? என்பதை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. அதை அறிந்து கொள்ள ஊடகங்களும் முன்வருவதில்லை.


வருமான வரித்துறை ரெய்டில் சிக்கும் பணமோ, நகையோ போலியானவை அல்ல. அவை சேர்க்கப்பட்ட விதத்தில் தான் தவறு இருக்கும். வருமானத்துறையிடம் தாக்கல் செய்த விபரத்திற்கு மாறாக அல்லது ஏமாற்றி சேர்க்கப்பட்ட சொத்தாக இருக்கும். அது ஒரு வரி ஏய்ப்பு நடவடிக்கை. அது போன்ற வரி ஏய்ப்பு இருக்கிறதா என்பதை அறியவே ரெய்டு நடக்கிறது.




பிடிபடும் பணம் மற்றும் நகைக்கு உரிய ஆவணங்கள் கொடுத்துவிட்டால் அவற்றை உரிமையாளரிடமே வருமான வரித்துறை திரும்ப ஒப்படைத்து விடும். ஒருவேளை செலுத்த வேண்டிய வரி, பிடிபட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பிற்கு சமமாக இருந்தால் அவற்றி வருமான வரித்துறையே எடுத்துக் கொள்ளும். செலுத்த வேண்டிய வரித் தொகை அதிகமாக இருந்தால், கைபற்றப்பட்ட பொருளின் மதிப்பை சேர்த்து அதற்கான கூடுதல் தொகையை சம்மந்தப்பட்டவரிடம் வருமான வரித்துறை வசூலிக்கும்.


இவ்வாறு பெறப்படும் பணத்தையோ, நகையையோ அல்லது பொருளையோ வருமான வரித்துறை நேரடியாக வரவு வைத்துக் கொள்ளாது. ரிசர்வ் வங்கியின் வருமான வரித்துறையின் கணக்கில் அவை வரவு வைக்கப்படும். அதுவும் அரசின் கருவூலத்தில் வைப்பதை போன்றது தான்.


அந்தக் காலகட்டத்துக்குள் அதன் உரிமையாளர் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். தவறும் பட்சத்தில்தான் சொத்துகள் மொத்தமும் கருவூலத்துக்கு சென்றுவிடும். இது தான் வருமான வரித்துறை நடத்தும் ரெய்டு முறை.




விடிய விடிய ரெய்டு நடந்தது, கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. என்பதோடு நாம் முடித்துக் கொள்கிறோம். ஆனால் அதன் பின் உரிய ஆவணங்கள் செலுத்தி, உரிய வரி செலுத்தி பணத்தையோ, பொருளையோ உரியவர்கள் மீட்டு வருவது பலருக்கு தெரிவதி்ல்லை. தேர்தலில் கைப்பற்றப்படும் பணமும் அப்படி தான். ஒரு நாள் செய்தியோடு முடிவதில்லை ‛ஐடி ரெய்டு’. எறிந்த பந்து மீண்டும் வருவதைப் போல் உரிய ஆவணங்களை அளித்து அவை மீண்டும் எடுத்த இடத்திற்கே வருவதும் உண்டு. அடித்து துவம்சம் செய்ய இது ‛வாத்தி ரெய்டு அல்ல ‛வருமானவரித்துறை ரெய்டு’.