ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ஒருவரை அவரது கட்சிக்காரர்களே தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. டெல்லியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கு யார் வேட்பாளர் என்ற பேச்சுவார்த்தை கைகலப்பாக மாற கடைசியில் எம்.எல்.ஏ வே தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பா.ஜ.க. தலைவர்கள் அதை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.


ஆம் ஆத்மி எம்எல்ஏ தாக்குதல்


உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி "காசு வாங்குகிறது" என்பதற்கு இந்த வீடியோவே ஆதாரம் என்றும், கட்சி தொண்டர்கள் அதன்மூல அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் பாஜக கூறியது. இந்த விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


டெல்லி சட்டமன்றத்தில் மத்தியாலாவின் பிரதிநிதியான குலாப் சிங் யாதவ், திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் கட்சித் தொண்டர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார், அப்போதுதான் இந்த பிரச்சனை வெடித்தது. தகராறு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், கடும் வாக்குவாதத்திற்கு மத்தியில், ஆத்திரமடைந்த தொண்டர்கள் எம்.எல்.ஏ.வை தாக்கி, காலரைப் பிடித்து தள்ளத் தொடங்கினர். குலாப்சிங் யாதவ் வெளியேற முயன்றபோது, தொண்டர்கள் அவரை விரட்டி அடித்தனர். தொண்டர்கள் கோபமானதை தொடர்ந்து, அங்கிருந்து ஓடும் காட்சிகள் விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.



பாஜக குற்றச்சாட்டு


இந்த வைரல் வீடியோவைப் பகிர்ந்தவர்களில் பா.ஜ.க.வின் சம்பித் பத்ராவும் ஒருவர். அதனை பகிர்ந்த அவர், "நேர்மையான அரசியல் என்ற கபட நாடகத்தில் ஈடுபட்ட கட்சியில் இருந்து வெளியாகியுள்ள காட்சிகள் அதனை தோலுரித்து காட்டுகிறது. அவர்களது உறுப்பினர்கள் கூட தங்கள் எம்.எல்.ஏ.க்களை விட்டுவைக்கவில்லை! இதேபோன்ற விளைவு வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு காத்திருக்கிறது, "என்று அவர் அந்த ஒன்றரை நிமிட வீடியோவோடு பதிவிட்டார். உள்ளாட்சி வேட்பாளருக்காக காசு வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் குலாப்சிங் யாதவ் ஆம் ஆத்மி கட்சியினரால் தாக்கப்பட்டதாக பாஜகவின் டெல்லி பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Vijay Warns Bussy Anand: புஸ்ஸி ஆனந்தால் டென்சனான விஜய்..! நேரில் அழைத்து கண்டித்த தளபதி..! என்ன நடந்தது..?






எம்எல்ஏ பதில்


சிறிது நேரம் கழித்து, பாஜக குற்றச்சாட்டுகளை மறுத்து எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் ட்வீட் செய்தார். "பாஜக-வுக்கு வெறிபிடித்துவிட்டது. உள்ளாட்சி சீட்டுகளை விற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது. நான் இப்போது சாவ்லா காவல் நிலையத்தில் இருக்கிறேன். பாஜகவின் கார்ப்பரேட்டரும், பாஜகவின் வேட்பாளரும் என்னை தாக்கியவர்களை காப்பாற்ற காவல் நிலையத்தில் இருப்பதைப் பார்த்தேன். இதை விட பெரிய ஆதாரம் என்ன இருக்க முடியும்? ஊடகங்கள் இங்கே உள்ளன, பாஜகவிடம் இதுகுறித்து கேட்க வேண்டும்,” என்று அவர் இந்தியில் ட்வீட் செய்தார். 






அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து


உள்ளாட்சித் தேர்தலுக்கான சீட்டுகளை ஆம் ஆத்மி கட்சி விற்பதை நிரூபிக்கும் வீடியோக்களை பாஜக இன்று வெளியிட்டது. பத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வீடியோவை வடமேற்கு டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் படமாக்கினார், அவர் சீட்டுக்கு ₹80,000 பணம் செலுத்துமாறு கேட்டார். ஆம் ஆத்மியின் 110 சீட்டுகளை பணத்திற்கு விநியோகம் செய்வதை வீடியோ வெளிப்படுத்தியது. வரும் சட்டசபை தேர்தலுக்காக குஜராத்தில் பிரசாரம் செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த குற்றச்சாட்டுகளை விளக்கினார். "பாஜக ஒவ்வொரு நாளும் புனைவுக் கதைகளை வெளியிடுகிறது. டெல்லி மக்கள் 15 ஆண்டுகளாக மாநகராட்சியில் (எம்சிடி) என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள். 27 வருடங்களில் என்ன செய்தார்கள் என்று குஜராத் மக்கள் கேட்கிறார்கள் அதற்கு பதில் இல்லை. இது போன்று அவதூறு பரப்ப மட்டுமே அவர்களுக்கு தெரியும்" என்று கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறினார்.


ஆம் ஆத்மி - பாஜக


டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் ஆம் ஆத்மி கட்சி உற்சாகமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து மூன்று முறை பிஜேபி ஆட்சி என்பதால், உள்ளாட்சியில் அக்கட்சி ஆட்சிக்கு எதிரான போக்கை கடைபிடிக்கிறது. குப்பைகளை அகற்றுவது முதல் MCD ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவது வரை, கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை அறிவித்துள்ளார்.


மேலும் 1995 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் ஆளும் பிஜேபிக்கு எதிராக ஆம் ஆத்மி தன்னை முதன்மைப் போட்டியாளராக முன்னிறுத்தி குஜராத் தேர்தலை அணுகுவது இன்னும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறுகின்றன, முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகும். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.