பாஜகவில் இருந்துகொண்டே அக்கட்சியை கடுமையாக விமர்சிப்பவர் என்றால் அது சுப்ரமணியன் சுவாமி தான். அமைச்சரவையில் இடம் கிடைக்காதது, கட்சியில் ஒதுக்கப்படுவது போன்ற காரணங்களால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். 


இந்திய நிதிலைமை மற்றும் ரூபாயின் மதிப்பு மோசமான நிலையை எட்டியது தொடர்பாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் நேரடியாக சாடியது பெரும் பேசுபொருளானது. ஆனாலும், மற்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது எடுப்பதை போன்று, எந்தவொரு கடும் நடவடிக்கையையும் சுப்ரமணியன் சுவாமி மீது பாஜக இதுவரை எடுத்ததில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்த பல வழக்குகள் நிலுவையில் இருப்பதே, பாஜகவின் மவுனத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.


ஜி-20 மாநாட்டில் மோடி:


இதனிடையே,  சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது உலக தலைவர்கள் பலரும் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடியை தேடி வந்து கை குலுக்கி பேசினார். அதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து இருப்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என பாஜகவினர் சிலாகித்தனர்.






மீண்டும் மோடியை சீண்டும் சுப்ரமணியன் சுவாமி:


இந்நிலையில் தான், பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டு, சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த பதிவில், பைடன் தன் தோள் மீது கைபோட்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கடும் கோபத்துடன்  முறைக்கும் வகையில் இருக்கும் அந்த புகைப்படம் உண்மையான புகைப்படமா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என வினவியுள்ளார்.


தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிகாரிகள் மோடி எவ்வளவு போலியானவர் என்று நிறைய கேலி செய்வதாகவும், இந்தியர்களுக்கு அந்த கேலிகளை கேட்பது வேதனையாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் அடங்கா ஆசையை, பிரதமர் மோடி நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சுப்ரமணியன் சுவாமியின் இந்த பதிவிற்கு, பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். 


பாஜக மீது அதிருப்தியில் உள்ள சுப்ரமணியன் சுவாமி:


அதேநேரம் சுப்ரமணியன் சுவாமி மீண்டும் எம்.பி ஆகும் வாய்ப்பை வழங்காத பாஜக, டெல்லியில் அவர் வசிக்கும் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், அரசு தரப்பில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சுப்ரமணியசுவாமி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு இல்லத்திலேயே தொடர்ந்து தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்திய அரசின் கடும் எதிர்ப்பால் அரசு இல்லத்தை விட்டு சுப்ரமணியன் சுவாமி வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, மத்திய அரசு தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.


கொல்லப்படுவேனா? ஒதுக்கப்படுவேனா? - சுப்ரமணியன் சுவாமி


மற்றொரு டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியும் அமித்ஷாவும் ஹரேன் பாண்டியாபோல் என் மீது திட்டமிடவில்லை என்று நான் நம்புகிறேன். அது உண்மையென்றால் என்னுடைய நண்பர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்க வேண்டும். எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை திரும்பி தருவேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.


அப்போது ஹரேன் பாண்டியா கொல்லப்பட்டதில் மோடி மற்றும் அமித்ஷாவை குற்றம் சாட்டுகிறீர்களா? என பலரும் கேள்வி எழுப்ப,  ஹரேன் பாண்டியா பாஜகவில் இருந்து ஒதுக்கப்பட்டதையே தான் குறிப்பிட்டதாக சுப்ரமணியன் சுவாமி விளக்கமளித்தார். இதேபோன்று, ஆசியகோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய போது, பிசிசிஐ-யின் செயலாளராக உள்ள அமித் ஷாவின் மகனானா ஜெய் ஷாவையும்  சுப்ரமணியன் சுவாமி மறைமுகமாக சாடியிருந்தார்.