கடந்த வாரம் தனது பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 13 வயது சிறுவன், உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை இறந்ததாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவர்
"சிர்சியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது கிராமத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கு சென்ற 3 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர், ஆகஸ்ட் 17 ஆம் தேதி பஹ்ரைச்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் தனது பள்ளி ஆசிரியரால் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தாக்கப்பட்டதாக அவரது மாமா புகார் கூறுகிறார். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்று ஷ்ரவஸ்தி எஸ்பி அரவிந்த் கே மவுரியாவை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
250 ரூபாய் செலுத்தவில்லை என நினைத்து…
உயிரிழந்த சிறுவனின் சகோதரரின் கூற்றுப்படி, சிறுவன் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டதாக நினைத்து அவனது ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. “மாதம் 250 ரூபாய் பள்ளிக் கட்டணத்திற்காக என் சகோதரனை அவனுடைய ஆசிரியர் அடித்தார். நான் அதனை ஆன்லைனில் ஏற்கனவே கட்டிவிட்டேன், ஆனால் அந்த விஷயம் ஆசிரியருக்கு தெரியாது, அதனால் என் சகோதரனை கொடூரமாக அடித்தார்... அவரது கை உடைந்து உள்ளேயே இரத்தக்கசிவு இருந்துள்ளது... அவர் என் சகோதரனை கொன்றார், ”என்று இறந்தவரின் சகோதரர் ராஜேஷ் விஸ்வகர்மா கூறினார்.
ராஜஸ்தான் சம்பவம்
ராஜஸ்தானில் ஒன்பது வயது தலித் சிறுவன், ஜாலோர் மாவட்டத்தில் பானையில் இருந்து தண்ணீரை குடித்ததற்காக ஒரு ஆசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவரின் மரணம் நடந்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல்களின்படி, ஜலோர் மாவட்டம், சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவர், ஜூலை 20 அன்று கடுமையாகத் தாக்கப்பட்டார், பின்னர் அவர் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்தார்.
வழக்குப் பதிவு
குற்றம் சாட்டப்பட்ட பயிற்றுவிப்பாளரான சைல் சிங் கைது செய்யப்பட்டு கொலை மற்றும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதற்கு முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஜாலோரின் சைலா காவல் நிலையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் மாணவர் உயிரிழந்தது சோகமானது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். "என்று அவர் இந்தியில் ட்வீட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.