அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் பாசோ ரோபில்ஸ் நகரத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் இருந்து அவசர காவல் துறை எண்ணுக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. ஆனால் உரையாடலுக்கு முன்னதாகவே அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


மர்ம அழைப்பால் விரைந்த போலீஸ்


இதனையடுத்து சந்தேகமடைந்த காவல் துறையினர், பாசோ ரோபில்ஸில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சூழ்நிலையை விசாரிக்க உடனடியாக விரைந்துள்ளனர்,


ஆனால் அங்கு நிலைமை சீராக இருந்துள்ளது. மேலும் இந்த மிருகக்காட்சி சாலையில் இருந்து எவரும் காவல் துறையினரை அழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கப்புச்சின் குரங்கின் சேட்டை


இந்நிலையில், உலகின் குறும்பான விலங்குகளில் ஒன்றான கப்புச்சின் குரங்கு ஒன்று, முன்னதாக காவல் துறையின் அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்திருந்தது கண்டறியப்பட்டது.


’ரூட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குட்டி கப்புச்சின் குரங்கு முன்னதாக மிருகக்காட்சி சாலையின் கோல்ஃப் மைதானத்தில் மறந்து வைத்துச் செல்லப்பட்ட செல்ஃபோனை எடுத்து அழைப்பு விடுத்ததும் கண்டறியப்பட்டுள்ளது.


"பொதுவாக கப்புச்சின் குரங்குகள் மிகவும் ஆர்வமுள்ளவை. நாம் கையில் வைத்திருக்கும் எவற்றையும் சட்டென பிடுங்கியோ அல்லது பொருள்களை எடுத்தோ பொத்தான்களை அழுத்தும். அதைத்தான் ரூட் செய்தது... இந்த முறை அழைப்பதற்கான சரியான கலவையிலான எண்களை அழுத்தியுள்ளது” என மிருகக்காட்சி சாலை தரப்பினர் குறும்புடன் தெரிவித்துள்ளனர்.


 






இந்நிலையில், இந்தக் குறும்புக்கார குரங்கின் பல புகைப்படங்களையும் முன்னதாக மிருகக்காட்சி சாலையினர் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.