நாம் பயன்படுத்தும் பிரதான பொருட்கள் பலவற்றிலும் அசல் எது? போலி எது என்று தெரியாத அளவிற்கு போலி பொருட்களின் பயன்பாடு வந்துவிட்டது. நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் கூட போலி பொருட்களின் மோசடி நடைபெற்று வருவது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பீகாரில் போலி போலீஸ் நிலையம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகாரில் அமைந்துள்ளது பங்கா மாவட்டம். இந்த மாவட்டத்தின் பிரதான நகரமான பங்காவில் காவல்நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காவல்நிலையத்தில் அதிகளவில் லஞ்சப்புகாரும், புகார் அளிக்கச் செல்பர்களிடம் பண மோசடி செய்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே வந்தது.




இந்த காவல்நிலையத்தில் டி.எஸ்.பி., காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பலரும் எப்போதும் இருந்து வந்தனர். இந்த நிலையில், இதுதொடர்பாக தகவல் அறிந்த பங்கா நகரத்தின் உண்மையான காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் அங்கே சென்று பார்த்தார். அப்போது, காவல்நிலையத்தில் அதிகாரப்பூர்வ துப்பாக்கிக்கு பதிலாக நாட்டுத் துப்பாக்கிகளுடன் காவலர்கள் பணியில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


உடனடியாக, காவல்துறையினரின் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு போலி காவல்நிலையம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.


இதையடுத்து, அந்த போலி காவல் நிலையத்திற்கு சென்ற உண்மையான போலீசார் போலி காவல் நிலையத்தை நடத்தி வந்த இரண்டு பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த காவல் நிலையம் பங்கா மாவட்டத்தின் எஸ்.பி.யின் குடியிருப்புக்கு அருகிலும், பங்கா நகரத்தின் உண்மையான காவல்நிலையத்திற்கு சில கிலோ மீட்டர் தொலைவிலுமே எட்டு மாதங்கள் வெற்றிகரமாக இயங்கி வந்ததுதான் மிகவும் வேதனையான விஷயம் ஆகும்.




போலீசார் விசாரணையில் போலா யாதவ் என்பவர்தான் இந்த போலி காவல்நிலையத்திற்கு மூளையாக செயல்பட்டதை அறிந்தனர். போலி காவல்நிலையத்தில் பணியாற்றிய அனிதா முர்மு, ஜூலி குமாரி மஞ்ஜி என்ற இரு பெண்களையும், ஆகாஷ்மஞ்ஜி, ரமேஷ்குமார் மற்றும் வகில் குமார் மொத்தம் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட போலா யாதவ் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் அவர்கள் தங்களிடம் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் பெற்று வந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் காவல் நிலையமாக நடத்தி வந்தது ஒரு ஹோட்டல் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


உண்மையான போலீசார் போலி காவல் நிலையத்தில் இருந்து நாட்டுத்துப்பாக்கிகள், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் 500 படிவங்கள், வங்கி புத்தகங்கள், 5 செல்போன்கள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இரு பெண்களான அனிதாவும், ஜூலியும் போலாவிடம் ரூபாய் 90 ஆயிரமும், ரூபாய் 50 ஆயிரமும் அரசு வேலைக்காக சேர்ந்துள்ளனர். போலாவை உண்மையான காவல்துறை அதிகாரி என்று நினைத்த அனிதாவும், ஜூலியும் தாங்கள் இருவரும் உண்மையிலே காவல்துறையில் பணியாற்றி வருவதாக நினைத்து பணியாற்றி வந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : Watch video: மலைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்ட புதிய தார் சாலை; கையால் பெயர்த்து எடுக்கும் அதிர்ச்சி வீடியோ


மேலும் படிக்க : Crime: வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியர் வெட்டி படுகொலை - ஏராளமான போலீசார் குவிப்பு