உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32 வயது இளைஞர் ஒருவருக்கு நடத்தப்பட்ட அறுவைசிகிச்சையில் அவரின் வயிற்றில் இருந்து 63 ஸ்டீல் ஸ்பூன்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
முசாபர்நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். 32 வயதான இவர் ஓராண்டுக்கு முன்னர் குடும்பத்தினரால் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தான் அவர் ஓராண்டாக கரண்டிகளை உண்டுள்ளார்.
இது குறித்து மருத்துவர் ராகேஷ் குரானா கூறுகையில், விஜயகுமார் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது அவரை இந்த ஸ்பூன்களை அவர்கள் உண்ணச் செய்ததாக அவர் கூறுகிறார். வயிற்று வலி காரணமாக அவர் எங்களிடம் வந்தா. எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது அவர் வயிற்றில் ஸ்பூன்கள் இருந்தது தெரிந்தது. அதனையடுத்தே நாங்கள் அறுவை சிகிச்சை செய்தோம். 2.30 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டி இருந்தது என்றார்.
மறுவாழ்வா மரண வியாபாரமா?
போதை மறுவாழ்வு மையங்கள் பலவும் மறுவாழ்வு தருவதைவிட மரணமே சிறந்தது என்பதுபோல் அங்கு வருவோரை எண்ண வைக்கிறது. போதை மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்படுவோர் தாக்கப்படுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இதன் காரணமாக அங்கு சிகிச்சை பெறுவோர் தப்பித்து ஓடுவதற்கு முயற்சிசெய்வார்கள் என்பதால் அவர்களைச் சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள் என்றெல்லாம் கூறப்படும். சில சம்பவங்கள் உண்மைதான். ஆனால் உண்மையில் இந்த மறுவாழ்வு மையங்கள் முறையாக இயங்கினால் நிச்சயமாக குடி மற்றும் பிற போதை வஸ்து பயன்பாட்டாளர்களை மீட்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுவோருக்கு ஆரம்பகட்டத்தில் நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் அதனைச் சரிசெய்ய குளூக்கோஸ் கொடுக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு போதையை மீண்டும் நாடாமல் இருப்பதற்கு, அமைதிப்படுத்துவதற்கு, தூங்குவதற்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு உடலுக்குத் தேவையான சத்து மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும். சுமார் ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறையே தொடர வேண்டிய தேவை இருக்கும். உடலும் மனதும் ஓரளவுக்கு யதார்த்தைப் புரியும் பக்குவத்திற்கு வரும்போது பிற நோயாளிகளுடன் இணைந்து பழக அனுமதிக்கப்படுவார்கள். சுமார் மூன்று வாரம் இங்கு தங்கி சிகிச்சை பெறுவார்கள். சிகிச்சை முடிந்து வெளியே செல்லும்போது போதைப்பழக்கத்தை மறந்துதான் செல்வார்கள். ஆனால் பிரச்னை எங்கு ஆரம்பிக்கும் என்றால்
மீண்டும் அவர்கள் வெளியே சென்றதும் அந்த போதைப்பொருள் அவர்களுக்குக் கிடைக்கத் தொடங்கும். அதனால் அவ்வாறு சிகிச்சை முடிந்து செல்வோருக்கு குடும்பம், நட்பு, பணியிடம் என எல்லாம் உதவிகரமாக இருக்க வேண்டும். போதைப்பொருளை அதிக நாள்கள் எடுத்துவிட்டு, திடீரென்று அந்தப் பழக்கத்தை நிறுத்தும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை Withdrawl Symptoms என்கிறோம். உதாரணத்துக்கு நீண்ட நாள் குடிப்பழக்கத்தைக் கைவிட்டவர்களுக்கு தலைவலி, வாந்தி வரும் உணர்வு, படபடப்பு, அதிக கோபம், தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதனால் 21 நாட்களுக்குப் பின்னரும் கூட அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் தேவைப்படும்.