இந்தியாவில் பயணிகள் கார்களுக்கான ஆறு ஏர்பேக் பாதுகாப்பு விதியை கட்டாயமாக அமல்படுத்துவதை அடுத்த ஆண்டு அக்டோபர் வரை தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்தார். இந்த விதி அக்டோபர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.


அக்டோபர் 1, 2022 முதல் மேம்பட்ட பாதுகாப்பிற்காக எட்டு இருக்கைகள் கொண்ட அனைத்து வாகனங்களிலும் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்க மத்திய அரசு முன்னதாகத் திட்டமிட்டிருந்தது.










மோதலின் போது டிரைவருக்கும் வாகனத்தின் டேஷ்போர்டிற்கும் இடையே ஏர்பேக் குறுக்கிடுகிறது. இதனால் கடுமையான காயங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆட்டோமொபைல் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் மேக்ரோ எக்கனாமிக் சூழ்நிலையில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சமாக ஏர்பேக்கை கட்டாயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 01, 2023 முதல் பயணிகள் கார்களில் 6 ஏர்பேக்குகள் (எம்-1 வகை) என்று நிதின் கட்கரி இன்று ட்வீட் செய்துள்ளார்.
"மோட்டார் வாகனங்களின் விலை மற்றும் மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அதில் பயணிக்கும் அனைத்து பயணிகளின்  உயிர் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை" என்று அமைச்சர் கூறினார்.


ஆறு ஏர்பேக் விதியை ஒத்திவைக்கும் அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ தனது ட்வீட்டில் "கார்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் இதர செலவு எதுவாக இருந்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே 6  ஏர்பேக் கொண்ட கார்கள் கட்டாயம் அக்டோபர் 2023 முதல் அமலுக்கு வரும். ஆனால் அனைவராலும் இந்த 6 ஏர்பேக்களை விலைகொடுத்து வாங்க முடியாது. மேலும் 'பாதுகாப்புக்கு முன்னுரிமை' என்பதால், கட்காரி அரசாங்கத்தை மானியம் வழங்குமாறு கேட்பாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.