தீபாவளிக்கு பின்பாக வருடா வருடம் டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். இந்த நிலையில்தான் கடந்த முறையை போல இந்த முறையும் டெல்லியில் காற்று மாஸை கட்டுப்படுத்த தீபாவளி அன்று வெடிவெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தடையை மீறி டெல்லியில் பல இடங்களில் வெடிகள் வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் பல பகுதிகளில் காற்று மாசு அளவு 600 புள்ளிகளை தாண்டியது. தலைநகர் டெல்லியில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி நிற்கிறது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுவுக்கு காரணம் என மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.
டெல்லி காற்று மாசு பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை விசாரணையின் போது, டெல்லியில் இருப்பது என்பது ஒருவர் 20 சிகரெட்டுகளை குடிப்பதற்கு சமம் என்று மாநில அரசு கூறியுள்ளது. இதனை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் இதற்கு என்னதான் தீர்வு? எமர்ஜென்சி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் 2 நாட்களுக்கு பொது முடக்கத்தை அறிவியுங்கள் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், காற்றுமாசை குறைக்க முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் டெல்லி புறநகர் பகுதிகளிலும் சம்மந்தப்பட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கெஜ்ரிவால் அரசு பரிந்துரை செய்துள்ளது. மேலும் வாகன நிறுத்த கட்டணங்களை 4 மடங்கு வரை உயர்த்தலாம், மெட்ரோ ரயில் சேவை எண்ணிக்கையை அதிகரிக்கலாம்,திறந்த வெளியில் கழிவுகளை எரிப்பதை தடுத்து நிறுத்தலாம் உள்ளிட்ட யோசனைகளை டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், 'டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது.டெல்லியில் காற்று மாசுபாடு மோசமான நிலையில் இருப்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இயலாது.உடனடியாக பலன் அளிக்கக் கூடிய விஷயங்களை முன்வைக்க வேண்டும்.,' என்று தெரிவித்தது. தொடர்ந்து, டெல்லியில் காற்று மாசுக்கு முக்கிய காரணம் ஆலைகள், வாகன போக்குவரத்து தான் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தொழிற்சாலைகள், வாகனங்களால் 75% காற்று மாசு ஏற்படும் நிலையில், அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் காற்று மாசுவின் அளவு அதிகரித்து காணப்படும் நிலையில், ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும், வேளாண் கழிவுப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விவசாயிகளை வலியுறுத்த வேண்டும் என்றும் மத்திய மற்றும் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் டெல்லியில் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை நாளை மாலைக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் டெல்லி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.