தமிழக மீனவர்கள் 12 பேர் கைது


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைப்பிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை சிறைப்பிடித்ததோடு, ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்களை இலங்கையில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தவெக மாநாடு - காலையிலேயே குவிந்த தொண்டர்கள்


விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற உள்ளது. இதில் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவற்றை அறிவிக்க உள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டு திடலில், காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பெரும் எதிர்பார்ப்பில் தவெக மாநாடு


விஜய் தலைமையில் நடைபெற உள்ள தவெக மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை முன்னிட்டு அவருக்கு அதிமுக, விசிகவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் விஜய் மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.


தவெக தொண்டர்கள் 2 பேர் உயிரிழப்பு:


சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் இருந்த இளைஞர் உயிரிழப்பு. மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி இருவரும் விழுப்புரத்தில் இன்று நடக்கும் த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற நிலையில் விபத்து நடந்துள்ளதாக தகவல். விழுப்புரத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த தவெக தொண்டரும் உயிரிழந்தார்.


நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் அக்.30 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 4900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகைக்காக 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் கவலையளிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை


மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். அமைதியை கடைப்பிடிக்கவும், உரையாடல் மற்றும் ராஜதந்திர பாதைக்குத் திரும்பவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மீண்டும் வலியுறுத்துகிறோம். அப்பாவி பணயக் கைதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் யாருக்கும் பயனளிக்கவில்லை - இந்திய வெளியுறவுத்துறை


ஆந்திராவில் லாரி, கார் மோதி விபத்து: 6 பேர் பலி


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சிங்கனமலை அருகே உள்ள நாயனபல்லி கிராஸ் என்னும் இடத்தில் வேகமாக வந்த காரின் முன் டயர் திடீரென பஞ்சரானது. இதில், எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனந்தபூரை சேர்ந்த சந்தோஷ், ஷண்முக், வெங்கண்ணா, ஸ்ரீதர், பிரசன்னா, வெங்கி ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபரானால் 3-ம் உலகப்போர் வரும் - டொனால்டு டிரம்ப்


பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், “சீன ஆதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் போன்ற தலைவர்களை சமாளிக்கும் அளவிற்கு கமலாவுக்கு திறமை கிடையாது. அவர் அமெரிக்காவின் அதிபரானால் நிச்சயம் 3-ம் உலகப்போர் வந்துவிடும். பல லட்சம் பேரின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகிவிடும். நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 3-ம் உலகப்போர் நிகழாமல் நிச்சயம் தடுப்பேன்” என பேசினார்.


பிலிப்பைன்ஸில் 81 பேர் பலி


பிலிப்பைன்சில் வீசிய புயலால் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 41 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


3 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, 2021ம் ஆண்டுக்குப் பின் சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் 2015ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது.