விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், வதந்திகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 12 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 275க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெரும்பாலான மிரட்டல்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவே விடுக்கப்பட்டன. குறிப்பாக, எக்ஸ் தளத்தின் மூலம் விமானங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை:
இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பேற்காது. ஐடி சட்டத்தின் கீழ், சமூக ஊடகங்கள் தண்டிக்கப்படாத வகையில் அதற்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
ஆனால், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் விவகாரத்தில் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ஐடி சட்டம் சமூக ஊடகங்களுக்கு பொருந்தாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "போலியான வெடிகுண்டு மிரட்டல்கள், ஏராளமான குடிமக்களை பாதிக்கும் அதே வேளையில், நாட்டின் பொருளாதார பாதுகாப்பையும் சீர்குலைக்கிறது. மேலும், இதுபோன்ற போலி வெடிகுண்டு மிரட்டல்கள் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்:
இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும்பாலும் தவறான தகவல்களாக உள்ளன. இவை பொது ஒழுங்கு, விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் விமானப் பயணிகளின் பாதுகாப்பை பெருமளவில் சீர்குலைக்கிறது.
இதுபோன்ற சட்டவிரோதமான, தவறான தகவல்களை வெளியிடுவதையும் பகிர்வதையும் நிறுத்துமாறு சமூக ஊடக தளங்களை கேட்டுக் கொண்டதுடன், சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் மூன்றாம் தரப்பு தகவல், தரவுக்கு வழங்கப்படும் விலக்கு அளிக்கப்படாது" என குறிப்பிட்டுள்ளது.