கவரைப்பேட்டை ரயில் விபத்து - அக்டோபர் 16, 17 தேதிகளில் விசாரணை
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அக்டோபர் 16, 17ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணை நடத்த உள்ளார். பாகமதி ரயில் ஓட்டுனர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரப்பேட்டை ரயில்நிலைய மேலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டம் என தகவல்.
குலசை தசரா - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி, 10-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயில் அருகே எழுந்தருளிய அம்மன், சிங்கம், எருமை மற்றும் சேவல் வடிவில் வந்த மகிஷாசூரனை வதம் செய்தார். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை உயர்த்த ஓபிஎஸ் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 8932 ஆக நிர்ணயம் செய்து இருப்பது மிகவும் குறைவு. 2024ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக உயர்ந்த வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
முன்னாள் அமைச்சர் சுட்டுக் கொலை
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை. சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சூழல் முற்றிலும் சீர் குலைந்துள்ளதை இச்சம்பவம் காட்டுவதாக ராகுல் காந்தி கருத்து.
துப்பாக்கிக்கு பூஜை செய்த ஜடேஜா மனைவி
குஜராத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில், பாஜக எம்.எல்.ஏவும், இந்தியா கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா துப்பாக்கியை வைத்து பூஜை செய்தார். ஜாம்நகரில் விமரிசையாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ரிவாபா ஜடேஜா, பயபக்தியோடு துப்பாக்கிக்கு மலர் வைத்து பூஜை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ராமாயணம் நாடகம் - கைதிகள் தப்பி ஓட்டம்
ஹரித்வார் சிறையில் கடந்த வெள்ளியன்று ராமாயணம் நாடகம் நடைபெற்றது. அப்போது, வானர படையாக குரங்கு வேடமணிந்த இரண்டு குற்றவாளிகள், சிறையில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவிழா ஸ்பெஷல் சடங்கு - 70 பேரின் மண்டை உடைந்தது
ஆந்திராவின் கர்னூல் அருகே தேவரக்கட்டு பகுதியில் ஆண்டுதோறும் நடக்கும் பன்னி திருவிழாவின் முக்கிய அம்சமான சண்டையிடும் சடங்கில், இந்தாண்டு 70 பேரின் மண்டை உடைந்து மருத்துவமனயில் அனுமதி. பல கிராமத்தார் குழுக்களாக பிரிந்து கொள்ளும் இந்த சடங்கு ஒவ்வோரு ஆண்டும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகள் மீது பரந்த புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது, ஈரானிய பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் 23 கப்பல்களைத் தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது, ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்
சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழைக்கு வாய்ப்பே இல்லாத வறண்ட பகுதியான சஹாராவில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. பெரு மழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரி நிரம்பியுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை - அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
மகளிர் டி20 உலகக் கோப்பை: பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி. 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வென்றுள்ள இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்கு செல்ல இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டி உள்ளது. இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.