Uttarkhand: உத்தராகண்ட் சிறையில் இருந்து தப்பியோடிய, கைதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சிறையில் ராமாயண நாடகம்:
நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள சிறையில், கடந்த வெள்ளியன்று மாலை ராமாயணம் நாடகம் நடத்தப்பட்டது. அதில் சிறைக்கைதிகளே, ராமன், லட்சுமனன், ஹனுமன் உள்ளிட்ர்ட வானர சேனை போன்ற ராமாயண கதாபாத்திரங்களாக வேடமணிந்து தத்ரூபமாக நடித்து அசத்தினர். இதனை பாதுகாப்பு பணியில் இருந்து காவலர்களும், கண்டுகளித்த வேலையில் சிறைக்கைதிகள் இரண்டு பேர் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானர வேடத்தில் தப்பியோடியை கைதிகள்:
ராவணானால் கடத்தப்பட்ட தீதையை தேடும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், வானர வேடமணிந்திருந்த கைதிகள் இரண்டு பேர் யாருக்கும் சந்தேகம் வராமல் மேடையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். தொடர்ந்து, கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்த சிறை வளாகத்தின் பின்புறத்திற்குச் சென்று, அங்கிருந்த ஏணி மூலம் சுவர் ஏறி மறுபுறம் குதித்து தப்பி ஓடியுள்ளானர். நாடகம் முழுவதும் முடிந்த பிறகு தான், கைதிகளின் மொத்த எண்ணிக்கையில் இரண்டு பேர் குறைவதை சிறை காவலர்கள் அறிந்துள்ளனர். தொடர்ந்து, சிறைக்குள் தேடிய போது, ஏணி கொண்டு குற்றவாளிகள் தப்பியது தெரிய வந்துள்ளது.
தப்பிய குற்றவாளிகள் யார்?
சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகள் ரூர்க்கியைச் சேர்ந்த பங்கஜ் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் வசிக்கும் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பங்கஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், கடத்தல் வழக்கில் ராஜ்குமார் விசாரணை கைதியாக உள்ளார். இந்த சூழலில் தப்பியோடிய அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை:
இதுகுறித்து பேசிய ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் கர்மேந்திர சிங், "சிறை நிர்வாகத்தினர் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளனர். ராமாயண நாடகத்தை பார்த்த நேரத்தில், தங்கள் கடமையிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். சம்பவம் தொடர்பாக பேசிய ஹரித்வார் மாவட்ட காவல்துறை எஸ்.எஸ்.பி. பிரமோத் சிங் தோவல், "கைதிகள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை தப்பி ஓடியுள்ளனர். ஆனால் இது குறித்து எங்களுக்கு சனிக்கிழமை காலைதான் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக இந்த காலதாமதம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தப்பியோடிய கைதிகளை விரைவில் கைது செய்வோம்” என்றார். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த முதலமைச்சர் புஷகர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.