நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஃபிட்னஸ் சேலஞ்சை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் தரகு நிறுவனமான ஜீரோதா. முன்னதாக, தங்கள் ஊழியர்களுக்கு ஏற்கனவே பல்வேறு விதமான உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. 


 






இந்த சேலஞ்சை முடிப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு ஊக்க தொகை கிடைக்கும் என்றும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் கூட வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ஜீரோதா தலைமை செயல் அலுலவர் நிதின் கமத் தெரிவித்துள்ளார்.


ஒரு நாளைக்கு குறைந்தது 350 கலோரிகளை குறைப்பது சவாலின் ஒரு பகுதி என்றும் தினசரி ஃபிட்னஸ் இலக்குகளை உருவாக்கி அதை எட்டுவது உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சியின் ஓர் அங்கம் என்றும் நிதின் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து நிதின் தனது லிங்க்ட்இன் பக்கத்தில், "உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையில் தினசரி உடற்பயிற்சி இலக்கை உருவாக்குவது ஜீரோதாவில் எங்களின் சமீபத்திய ஃபிட்னஸ் சேலஞ்சில் ஒரு பகுதி. அடுத்த வருடம், 90% நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் அனைவருக்கும் ஒரு மாத சம்பளம் போனஸாக தரப்படும். மேலும், அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் குலுக்கல் முறையில் அளிக்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.


வீட்டிலிருந்து வேலை செய்யும் போது சுறுசுறுப்பாக இருக்க தொழிலாளர்களை ஊக்குவிக்க தனது நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கமத் கூறினார்.


கமத், தனது பதிவில், "நம்மில் பெரும்பாலோர் வொர்க் பிரம் ஹோமில் இருக்கின்றனர். அதிக நேரம் உட்கார்ந்திருப்பதே ஆபத்தை விளைவிக்கும் தொற்றுநோயாக மாறியுள்ளது. நிறுவனத்தில் உள்ள அனைவரையும் தூண்டுவதற்கு நாங்கள் எல்லாத்தையும் செய்கிறோம். அவர்களும் அவர்களது குடும்பங்களும் தினமும் நடை பயிற்சி செய்கிறார்கள் என்று நம்புகிறோம்.


கொரோனாவுக்குப் பிறகு எனது எடை அதிகரித்ததிலிருந்து, உடல் ஆரோக்கியத்தில் கண்காணிக்க தொடங்கினேன். இறுதியில் உணவுப்பழக்கத்திலும் அதிக கவனம் செலுத்தினேன். தினசரி இலக்கை 1000 கலோரிகளாக மெதுவாக உயர்த்தினேன். உடல் ஆரோக்கிய செயல்பாட்டை கண்காணிக்கும் மற்றவர்களைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.


இந்த ஆண்டு ஏப்ரலில், ஊழியர்களுக்கு எடை குறைப்பு ஊக்கத்தொகையை ஜீரோதா ஏற்கனவே அறிவித்துள்ளது. 25க்கும் குறைவான பிஎம்ஐ உள்ள பணியாளர்களுக்கு அரை மாத ஊதியத்திற்கு சமமான போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.