மத்திய பிரதேசத்தில் 10 வயது பழங்குடியின மாணவியை மற்ற மாணவர்கள் முன்னிலையில் அழுக்கு சீருடையை கழற்றச் சொன்னதாகக் கூறப்படும் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று ஷாஹ்டோல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில், 5 ஆம் வகுப்பு மாணவி தனது உள்ளாடையில் மட்டுமே காணப்படுகிறார். ஆசிரியர் ஷ்ரவன் குமார் திரிபாதி அவரது துணிகளைத் துவைப்பதையும், மற்ற பெண்கள் அருகில் நின்று கொண்டிருப்பதையும் அந்த புகைப்படத்தில் பார்க்கலாம்.
அந்த மாணவி தனது உடைகள் உலரும் வரை சுமார் இரண்டு மணி நேரம் அந்த நிலையில் உட்கார வேண்டியிருந்தது என்று கிராமவாசிகள் சிலர் கூறினர்.
கிராமத்தில் உள்ள பழங்குடியினர் விவகாரத் துறையால் நடத்தப்படும் அரசு தொடக்கப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஆசிரியராக பணியாற்றி வரும் திரிபாதி, அந்தத் துறையின் வாட்ஸ்அப் குழுவில் நடந்த சம்பவத்தின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தன்னை தூய்மை தன்னார்வலர் என குறிப்பிட்டு வாட்ஸ்அப் குழுவில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து கிராம மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
மத்தியப் பிரதேச பழங்குடியினர் நலத் துறையின் உதவி ஆணையர் ஆனந்த் ராய் சின்ஹாவைத் தொடர்பு கொண்டபோது, இந்தச் சம்பவத்தின் படங்கள் குறித்து தனக்குத் தெரிந்த பிறகு, திரிபாதி சனிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
சிறுமியின் சீருடை அழுக்காக இருந்ததாகவும் அதை பார்த்த ஆசிரியர், அதைக் கழற்றி மற்ற மாணவர்கள் முன்னிலையில் துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக சின்ஹா கூறியுள்ளார்.