நாட்டின் தலைசிறந்த கல்வி நிலைங்களாக திகழும் ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
ஐ.ஐ.டி.யில் தொடரும் தற்கொலைகள்:
அதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது. போவாய் பகுதியில் அமைந்துள்ள ஐஐடி கல்லூரியின் மாணவர் விடுதியில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவன் குறிப்பு எதையும் விட்டு செல்லவில்லை. விபத்து மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ஐஐடி கல்லூரியில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மன அழுத்தமா?
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "அகமதாபாத்தைச் சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி. பிடெக் மாணவர். அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்தார். அவரது முதல் செமஸ்டர் தேர்வுகள் சனிக்கிழமை முடிந்தது. அழுத்தம் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்"
மாணவர் அமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கையில், "தர்ஷன் சோலங்கி என்ற 18 வயது தலித் மாணவன், 3 மாதங்களுக்கு முன் ஐஐடி மும்பையில் BTech படிப்பிற்காக சேர்ந்துள்ளார். அவருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.
கேலி:
இது ஒரு தனிப்பட்ட/தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக ஒரு நிறுவன கொலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் புகார்கள் அளித்த போதிலும், தலித், பகுஜன், ஆதிவாசி மாணவர்கள் உள்ளடங்கிய பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு கல்லூரி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான உணர்வுகளை தூண்டி தகுதியில்லாதவர்கள், தகுதியற்றவர்கள் என்று கேலி செய்வதால் முதலாம் ஆண்டு மாணவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு பிரிதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை" என குறிப்பிட்டுள்ளது.
அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "SC/ST சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்தில் பெரும் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது மறைக்கப்படாத உண்மை" என குறிப்பிட்டுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050