ஐஐடி கரக்பூரில் உள்ள ஹாஸ்டல் அறையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. 



கதவை தட்டிய பெற்றோக்கு ஷாக்:


சமீபத்தில் கூட, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐ.ஐ.டி. மும்பையில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டினர்.


இந்த நிலையில், ஐஐடி கரக்பூரில் மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர், தன்னுடைய ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை பார்க்க கல்லூரிக்கு வந்த அவரது பெற்றோர், தற்கொலை செய்து கொண்ட தன்னுடைய மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


ஐஐடி கரக்பூரில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படித்து வருகிறார் ஷான் மாலிக். இவரை காண, இவரது பெற்றோர், நேற்று கல்லூரிக்கு சென்றனர்.


ஐஐடியில் தொடரும் தற்கொலை:


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாணவரின் விடுதி அறைக்கு அவரது பெற்றோர் சென்றனர். பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் பதிலளிக்காததால், அவரது பெற்றோர் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் விடுதி அறையின் கதவை வலுக்கட்டாயமாக திறக்க நேரிட்டது.


அப்போதுதான், அறையில் மாலிக் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மாலிக் முந்தைய நாள் இரவு கூட தனது பெற்றோருடன் தொலைபேசியில் பேசினார். முற்றிலும் இயல்பாகத்தான் நடந்து கொண்டுள்ளார். மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும். பிரேத பரிசோதனை முடிந்து, அது வீடியோ எடுக்கப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது" என்றார்.


இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த சோகமான சம்பவத்தால் கல்லூரி நிலைகுலைந்தது. மாலிக்கின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலையும் ஆதரவையும் வழங்குவதே இந்த நேரத்தில் எங்கள் முதன்மையான முன்னுரிமை ஆகும். நம்பமுடியாத கடினமான நேரத்தில் அவர்களுக்கு உதவ தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.