பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பண்டிட் விஷ்ணு ரஜோரியா என்பவர் பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவராக மாநில கேபினட் அமைச்சராகவும் உள்ளார்.

மத்தியப் பிரதேச அரசு வாரியத்தின் தலைவர் நான்கு குழந்தைகளைப் பெற முடிவு செய்யும் இளம் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பண்டிட் விஷ்ணு ரஜோரியா என்பவர் பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவராக மாநில கேபினட் அமைச்சராகவும் உள்ளார்.
போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ரஜோரியா, "நாம் பெரும்பாலும் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டதால் மதவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இளைஞர்களிடமிருந்து எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. பெரியவர்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. கவனமாகக் கேளுங்கள். எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாப்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு. இளைஞர்கள் ஒரு குழந்தை பெற்றால் போதும் என்ற இலக்கை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்கள். இது மிகவும் சிக்கலானது. குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பின்னர் அவர் நான்கு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ரூ.1 லட்சம் விருதை வழங்கும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் வாரியத் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், விருது வழங்கப்படும்" என வாக்குறுதி கொடுத்தார்.
மேலும், “பிள்ளைகளை படிக்க வைப்பது இப்போது சிரமம் எனவும்
கல்வி இப்போது விலை உயர்ந்ததாக இருக்கிறது எனவும் இளைஞர்கள் அடிக்கடி என்னிடம் கூறியுள்ளனர். ஆனால், எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் பின்வாங்காதீர்கள். இல்லையெனில், மதவெறியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றுவார்கள்" எனத் தெரிவித்தார்.
பின்னர், ரஜோரியா தனியார் சேனலுக்கு பேட்டி அளிக்கையில், இந்த அறிவிப்பு ஒரு தனிப்பட்ட முயற்சி என்றும் அரசாங்க முயற்சி அல்ல என்றும் கூறினார்.