ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரியின் உறவினர்களுக்கு காஷ்மீர் காவல் ஆய்வாளர் (ஐஜிபி) விஜயகுமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹரிபரிகம் என்ற கிராமத்தி வசித்து வந்த சிறப்பு போலீஸ் அதிகாரி பயஸ் அகமது இல்லத்தில் நேற்றிரவு 11 மணியளவில் புகுந்த பயங்கரவாதிகள், அவரையும், அவரது மனைவி ராஜ பேகம் மற்றும் மகள் ராஃபியா ஆகியோரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் போலீஸ் அதிகாரி  பயஸ் அகமது மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த மகள், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டது.


இந்நிலையில், பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, போலீஸ் அதிகாரியின் மகள் ராஃபியா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் காவல் ஆய்வாளர் (ஐஜிபி) விஜயகுமார், பயங்கரவாதிகளில் தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு போலீஸ் அதிகாரி  பயஸ் அகமது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறிய அவர், இந்த கொடூரச் செயலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறினார். 






 


மேலும், புல்வாமா மாவட்டத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரைக் சுட்டுக்கொன்ற வழக்கில் வெளிநாட்டவர் உட்பட இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்ரவாதிகள் ஈடுபட்டதாக காஷ்மீர் காவல் ஆய்வாளர் (ஐஜிபி) விஜயகுமார் கூறினார்.






 


ஜம்மு விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய அதே தினத்தில், சிறப்பு போலீஸ் அதிகாரி குடும்பத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜம்மு விமான நிலையம் அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. விமானப்படை உயர்நிலை குழு தீவிர விசாரணை..!