குழந்தைகள் காலை ஏழு மணிக்கு பள்ளிக்குச் செல்லலாம் என்றால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏன் ஒன்பது மணிக்கு தங்கள் நாளைத் தொடங்க கூடாது என நீதிபதி உதய். யு. லலித் கேள்வி எழுப்பியுள்ளார்.


உச்ச நீதிமன்ற நீதிபதி வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய நிலையில், இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.


வார நாள்களில் உச்ச நீதிமன்ற அமர்வு காலை 10:30 மணிக்கு கூடுகிறது. அமர்வு மாலை 4 மணி வரை இயங்கும் நிலையில், நடுவே 1 மணி முதல் 2 வரை உணவு இடைவேளை வழங்கப்படுகிறது.


இச்சூழலில், வழக்கத்திற்கு மாறாக, காலை 9:30 மணிக்கு உச்ச நீதிமன்ற அமர்வை லலித் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கினார். இந்த அமர்வில், நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


பிணை தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் தலைமை நீதிபதி முகுல் ரோத்தகி முன்கூட்டியே அமர்வு தொடங்கியதற்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "நீதிமன்றத்தை தொடங்குவதற்கு காலை 9:30 மணியே முறையானதாக இருக்கும் என சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.


இதற்கு பதிலளித்த நீதிபதி லலித், "நீதிமன்றம் முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்பதே எனது பார்வையாக இருந்து வருகிறது. நாம் காலை 9 மணிக்கு நீதிமன்றத்தை தொடங்க வேண்டும். எங்கள் குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லலாம் என்றால், நாம் ஏன் 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என நான் எப்போதிலிருந்தோ கூறி வருகிறேன்" என்றார்.


அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரவுள்ள லலித் கடந்த ஆகஸ்ட் மாதம், "உச்ச நீதிமன்ற அமர்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கி, 11.30 மணி வரை நடத்தப்படலாம். அரை மணி நேர இடைவெளி விட வேண்டும். மீண்டும் 12 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிக்க வேண்டும். மாலையில் அதிக விஷயங்களைச் செய்ய உங்களுக்கு நேரம் கிடைக்கும்" என்றார்.


தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஓய்வை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக லலித் ஆகஸ்ட் 27 அன்று பதவியேற்க உள்ளார். இவர், நவம்பர் 8 வரை தலைமை நீதிபதியாக இருப்பார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண