தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், போலந்தில் வேலை கிடைத்த மனைவியோடு குழந்தையை அழைத்து செல்ல கூடாது என கணவர் கூற அந்த வழக்கிற்கு மும்பை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.
தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை :
கணவருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், போலந்து நாட்டில் வேலை கிடைத்த பெண் தனது 9 வயது மகளை உடன் அழைத்துச் செல்ல அனுமதி கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தந்தையோ குழந்தையை போலந்து அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து, அவ்வாறு சென்றால் தான் குழந்தையை மீண்டும் பார்க்க முடியாமல் போய் விடும் என நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், போலந்தில் நிலைமை சரியில்லை எனவும் குழந்தையின் தந்தை தன் தரப்பு வாதத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் நீதிபதி பாரதி டாங்ரே கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளார். அந்த தீர்ப்பில் தாய் தனது ஒன்பது வயது மகளை போலந்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளித்துள்ள நீதிமன்றம், அதே நேரத்தில், தந்தையை நேரடியாகவும், இணைய வழியிலும் குழந்தையிடம் பேச அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இருபுறம் நிற்கும் பெற்றோர்
ஒரு மகளுக்கும் அவரது தந்தைக்கும் இடையேயான அன்பைப் போல மிகவும் சிறப்பு வாய்ந்த எதுவும் இல்லை. தன் மகள் தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்ற எண்ணத்தில் வேதனைப்படும் தந்தை ஒருபுறமும், தன் முன்னேற்றத்திற்காக ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பும் பெண் மறுபுறமும் உள்ளனர்.
வேலையா? குழந்தையா?
தனக்கு பிடித்த வேலையைச் செய்ய விரும்பும் ஒரு பெண்ணின் விருப்பத்தை நீதிமன்றம் மறுக்க முடியாது. வேலை முக்கியமா, குழந்தை முக்கியமா என்ற கையறு நிலைக்கு பெண்களைத் தள்ள வேண்டாம். குழந்தைக்காக பெண்களின் வேலை செய்யும் உரிமையை மறுக்கக் கூடாது. குழந்தை பிறந்ததில் இருந்து இன்று வரை தனி ஆளாக தாய் வளர்த்துள்ளார். சிறுமியின் வயதைப் பற்றி யோசித்தால், அவர் தனது தாயுடன் செல்ல வேண்டியதுதான் அவசியம்.
தந்தையை பேச அனுமதிக்க வேண்டும்
வேலையில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், அவர் அவரது வேலை, குழந்தை கவனிப்பு இரண்டையும் சரியாக மேலாண்மை செய்து, ஆரோக்கியமாக குழந்தையை வளர்த்துள்ளார் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். போலந்தில் விடுமுறை நாட்களின் போது குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வரவும், குழந்தையின் தந்தை நேரடியாகவும், தினமும் இணைய வழியாகவும் பேச அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்