ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர்.


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் பங்கேற்று பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து பேசினார்.


”வெறுப்பை தவிர எதை விதைத்தாலும் வளர்க்கும் திறன்”


இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் பஞ்சாப் மாநிலம் அமைந்துள்ளது. பஞ்சாப் மாநில எல்லையானது, சுமார் 531 கி.மீ பாகிஸ்தானை  நாட்டை ஒட்டியுள்ளது. இதன் காரணமாக சமூக விரோதிகள் அவ்வப்போது, நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மிகவும் வளமான நிலத்தை கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வெறுப்பை தவிர எதை விதைத்தாலும் வளர்க்கும் திறனைக் கொண்டுள்ளது" என்று முதல்வர் மான் கூறினார்.


"மாநிலத்தில் மக்களிடையே, இங்கு சமூக பிணைப்பு மிகவும் வலுவாக உள்ளது, அதை யாராலும் தடுக்க முடியாது. பஞ்சாப் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். பஞ்சாபிகள் கடின உழைப்பாளிகள்,  உலகளாவிய குடிமக்கள், உலகம் முழுவதும் பரவியிருக்கிறோம். பஞ்சாபைச் சேர்ந்த ஒருவரிடம் என்ன வேண்டும் என கேட்டால், அவருக்கு உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் தேவை என அவர் பதிலளிப்பார்".


ட்ரோனை தடுக்க நடவடிக்கை:


மாநிலத்தில் போதைப் பொருட்களைக் கடத்த ட்ரோன் பயன்படுத்தப்படுவது குறித்து பஞ்சாப் முதல்வரிடம் கேட்டபோது, அதற்கு பதிலளித்த பக்வந்த் மன்,  "இவை அனைத்தும் முன்பு இருந்தே நடந்து வருகின்றன, இதை எதிர்கொள்ள, பஞ்சாப் காவல்துறை துணை ராணுவத்தினருடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும், நாங்கள் ட்ரோன்களை பிடிக்கிறோம், போதைப் பொருள் கடத்தல்காரர்களும் மாநில காவல்துறையினரால் பிடிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.


போதைப்பொருள் பிரச்னையை எதிர்கொள்வதற்காக, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம். கூட்டத்தில், ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை எங்களுக்கு வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தோம். இந்தியாவுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் வழியாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் இருந்து போதை பொருட்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்யும் வழக்குகள் ஏராளமாக உள்ளன.  கார்கள், பைக்குகள் மற்றும் பிற வாகனங்களைப் போலவே, ட்ரோன்களுக்கான பதிவும் நடந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபரை அணுகுவது எங்களுக்கு எளிதாக இருக்கும் என தெரிவித்தார்


மூன்று வழிமுறைகள்:


போதைப்பொருள் பிரச்னையை அதன் வேர்களிலே ஒழிக்க, மூன்று வழிமுறைகளை பகவந்த் மன் பட்டியலிட்டார்.


முதலில் அனைத்து விநியோகஸ்தர் மற்றும் போதைப்பொருள் சப்ளையர்களையும் ஒழிப்பது, 


இரண்டாவதாக போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கான மறுவாழ்வு மையத்தை நிறுவுவது. 


மூன்றாவதாக மிக முக்கியமானதாகவும்,  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது என தெரிவித்தார்.