ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் பங்கேற்று பேசிய டெல்லி முதல்வர், துணை முதல்வர் சிசோடியா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
”பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்”
இவ்விழாவில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா ஒரு 'பொய்' வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்படுவார் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கல்வியில் ஒரு புரட்சி மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று சிசோடியா நம்பிக்கை தெரிவித்தார். அப்படிப்பட்டவரை பொய் வழக்கில் சிக்க வைத்து, அவப்பெயரை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது"
மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது, ஆனால் சிசோடியா குற்றம் சாட்டப்படவில்லை. தகுதியற்ற பல விற்பனையாளர்களுக்கு டெல்லி அரசு லஞ்சம் கொடுத்து லைசென்ஸ் வழங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 2021 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட கலால் கொள்கை எட்டு மாதங்களுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது.
”23 ஆண்டுகால நண்பர்கள்”
நானும், சிசோடியாவும் கடந்த 23 ஆண்டுகளாக நண்பர்கள் என்று கூறிய ஆம் ஆத்மி தலைவர், அவரை சந்தித்த சம்பவத்தை விவரித்தார். 1999 ஆம் ஆண்டு டிசம்பரில் நான் வருமான வரித்துறையில் பணியாற்றியபோது, சிசோடியாவை முதன் முதலில் சந்தித்தேன். அப்போது, பரிவர்த்தன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி, லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை, மக்கள் தெரிவிக்கும் வகையில் இணையதளம் ஒன்றை தொடங்கினேன். நான் பின்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்தேன், எனது ஈடுபாடு பற்றி யாருக்கும் தெரியாது" என்று டெல்லி முதல்வர் கூறினார்.
ஒரு கட்சி எப்பொழுதும் தேர்தலை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறது. அது நாட்டுக்கு எதுவும் செய்வது கிடையாது. ஆனால், நாங்கள் எப்பொழுதும் தேர்தலை பற்றி நினைப்பது கிடையாது. நாங்கள் நாடு குறித்து சிந்தித்து கொண்டிருக்கிறோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். நான், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தேன், அப்போது பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பேசினோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.