உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. உடல் பருமன் காரணமாக டைப் 2 நீரிழிவு நோயும் இதய நோயும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதோடு, எலும்பிலும் இனப்பெருக்கத்திலும் பாதிப்பு ஏற்படலாம். சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.


சீக்கிரமா எடை குறைப்பது நல்லதா?


இதனால், சமீக காலமாகவே உடல் எடையை குறைக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், உடல் எடையை விரைவாக குறைக்கும் நோக்கில் மருந்துகளை எடுத்து கொள்வது மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உடல் எடை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


அதன்படி, படிப்படியாக உடல் எடையை குறைக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சமச்சீரான உணவை பரிந்துரைத்த ICMR, விரைவாக உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை உட்கொள்ளவோ ​​வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.


தொப்பை, அதிக எடை, உடல் பருமன் ஆகியவற்றைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என ICMR ஆலோசனை வழங்கியுள்ளது. தவறான வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் நோய்களைத் தடுக்க உடல் பருமன் மற்றும் தொப்பை ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என தெரிவித்த ICMR, அதற்கான உத்திகளையும் வெளியிட்டுள்ளது.


ICMR வெளியிட்ட வழிகாட்டுதல்கள்:


ஒருவர் உடல் பருமனாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை BMI-யே தீர்மானிக்கிறது. உடல் உயரத்தின் சதுரத்தை உடல் நிறையால் வகுத்தால் கிடைக்கும் எண்தான் BMI ஆகும். (BMI = kg/m2, இதில் கிலோ என்பது கிலோகிராமில் உள்ள ஒருவரின் எடையாகும். m2 என்பது சதுர மீட்டரில் உள்ள உயரம்)


ஆசியர்களை பொறுத்தவரையில், 23 முதல் 27.5 கிலோ வரையிலான பிஎம்ஐ இருந்தால், அவர்கள் அதிக எடையில் உள்ளார்கள் என வரையறுக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் 30 சதவிகித வயது வந்தவர்களும் கிராமப்புறத்தில் 16 சதவிகித வயது வந்தவர்களும் உடல் பருமனாக இருக்கிறார்கள்.


"எடை குறைப்பு படிப்படியாக இருக்க வேண்டும். எடை குறைக்கும்போது ஒரு நாளைக்கு 1000 கிலோகலோரிக்கு குறைவாக உணவு எடுத்து கொள்ளக் கூடாது. அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எடுத்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு அரை கிலோ உடல் எடையைக் குறைப்பது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.


விரைவான எடை இழப்பு மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு போன்ற அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆரோக்கியமான எடை மற்றும் இடுப்பின் சுற்றளவை பராமரிக்க காய்கறிகள்,  தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸை எடுத்து கொள்ள வேண்டும்.


சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் பழச்சாறுகள் தவிர்க்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களில் அடங்கும். வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் யோகா உடல் எடையை குறைக்க மற்றும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும்" என ICMR தெரிவித்துள்ளது.