பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை, நான்கு கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5ஆம் கட்டமாக வரும் 20ஆம் தேதி (நாளை மறுநாள்) 49 தொகுதிகளுக்கும் 6ஆம் கட்டமாக 25ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. 


டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் வரும் 25ஆம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தள்ளாத வயதிலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


வீட்டில் இருந்துபடியே ஜனநாயக கடமையாற்றியுள்ளார் மன்மோகன் சிங். முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து வாக்களிப்பதற்கான வசதியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தந்துள்ளது.


வீட்டில் இருந்து ஜனநாயக கடமையாற்றிய மன்மோகன் சிங்:


அந்த வகையில், முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்கோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வீட்டில் இருந்து வாக்களித்துள்ளதாக டெல்லி தேர்தல் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.


டெல்லியை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் முதல் வீட்டில் இருந்து வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. வரும் 24ஆம் தேதி வரை, டெல்லியில் உள்ள முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.


வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியை நேற்று மட்டும் 1409 வாக்காளர்கள் பயன்படுத்தியுள்ளனர். மேற்கு டெல்லியில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்த வசதியை பயன்படுத்தி கொண்டனர். அங்கு மட்டும் 348 பேர் வீட்டில் இருந்து வாக்களித்துள்ளனர். அவர்களில் 299 பேர் முதியவர்கள். இதுவரை, மொத்தம் 2,956 வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.


டெல்லி முழுவதும் மொத்தம் 5,406 வாக்காளர்கள் -- முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் -- 2024 மக்களவைத் தேர்தலில் வீட்டில் வாக்களிக்கும் வசதியைப் பெற, படிவம் 12D ஐ பூர்த்தி செய்து விண்ணப்பித்துள்ளனர்.


முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக வாக்களிக்கும் நோக்கில் வீட்டில் இருந்து வாக்களிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லியை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக தனித்து களமிறங்குகிறது. கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது.


இதையும் படிக்க: Fact Check: பொதுமக்களால் தாக்கப்பட்டாரா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன்? வைரல் வீடியோ உண்மையானதா?