இந்திய கலாச்சாரத்தில் இரண்டர கலந்த காபி, டீ அனைத்து தரப்பு மக்களால் அதிகம் விரும்பப்படும் பானங்களாக உள்ளன. காலை, மதியம், மாலை, இரவு என காலம், நேரம் பார்க்காமல் காபி, டீ அருந்துவதை இந்தியர்கள் பழக்கமாக கொண்டுள்ளனர்.


காபி, டீ அருந்தலாமா?


இந்த நிலையில், காபி, டீ பானங்களை அதிகமாக அருந்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிவுறுத்தியுள்ளது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து புதிய உணவுமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


இந்தியா முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பலதரப்பட்ட உணவு முறையையும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதன் அவசியத்தை வழிகாட்டு நெறிமுறை எடுத்துரைக்கின்றன.


டீ, காபியின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே சமயத்தில் அதை அதிகமாக அருந்துவதால் உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து ICMR ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கையில், "டீ மற்றும் காபியில் கேஃபின் (caffeine) இருக்கிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது.  உடலியல் ரீதியாக டீ மற்றும் காபியை சார்ந்து வாழும் தன்மையை உருவாக்குகிறது" என்கிறார்கள்.


ICMR வெளியிட்ட வழிகாட்டுதல்கள்:


டீ மற்றும் காபியில் எவ்வளவு கேஃபின் இருக்கிறது என்ற தகவலும் வழிகாட்டுதல்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 150 மி.லி. கப் காய்ச்சிய காபியில் 80 - 120 மி.கி கேஃபின் உள்ளது. இன்ஸ்டன்ட் காபியில் 50 - 65 மி.கி. கேஃபினும் டீயில் 30 - 65 மி.கி. கேஃபினும் உள்ளது.


ஒரு நாளுக்கு 300 மி.கி. கேஃபின் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என ICMR ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதேபோல, சாப்பாடு சாப்பிட்ட 1 மணி நேரம் முன்பும், பின்பும் காபி, டீ குடிப்பதை தவிர்க்குமாறு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


இதற்கான காரணத்தை விளக்கிய ICMR, "ஏனெனில் அவற்றில் டானின்கள் (tannins) உள்ளன. அது உடலில் இரும்பு சத்து உட்கொள்வகை குறைக்கும். வயிற்றில் இரும்பு சத்துடன் டானின்கள் பிணைக்கப்படுகின்றன. இதனால், இரும்பு சத்தை சரியாக உட்கொள்வததை கடினமாக்குகிறது.


இது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதிகப்படியாக காபியை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.


பால் இல்லாமல் டீ அருந்துவது உடலில் பல்வேறு நன்மைகளை பயக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கும்" என வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மெலிந்த இறைச்சிகள் மற்றும் கடல் உணவை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் ICMR வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.