வீடியோகான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வங்கி கடன் முறைகேடு வழக்கில் கைதான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபர் கோச்சார், இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் மற்றும அவரது கணவர் தீபக் கோச்சார் முறைகேடாக கைது செய்யப்படுள்ளதாக குறிப்பிட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது, சந்தா கோச்சார் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கிய மோசடி குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வந்தது. இருவரும் கடந்த டிசம்பர் 23- ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சந்தா கோச்சார் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி,6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை இன்றைக்கு (ஜனவரி,9) ஒத்தி வைத்தது.
இன்றைய விசாரணையின்போது, "ஊழல் தடுப்புச்சட்ட பிரிவு 17 ஏ-யின் படி எங்களின் கைது சட்டவிரோதமானது. அதன்படி ஒரு விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சி.பி.ஐ. முன் அனுமதி ஏதும் பெறவில்லை.” என்று கோச்சார் தம்பதி தரப்பில் வாதிட்டப்பட்டது. "சந்தா கோச்சார் கைது செய்யப்பட்ட போது, பெண் அதிகாரி யாரும் அங்கு இல்லை" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், "குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 41 ஏயின் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருவரிடமும் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை செய்து வந்தது. அப்படியிருக்கையில், இந்த கைது நடவடிக்கைக்கான அவசியமில்லையே.” என்றும் தெரிவித்துள்ளனர்.
சி.பி.ஐ. சார்பில் அளிக்கப்பட்ட பதிலின் விவரம்:
சந்தா, தீபக் கோச்சார் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. மறுத்துள்ளது. இருவரும், அழைத்தபோது ஆஜாரானார்கள். ஆனால், அவர்களது உடல்மொழி மற்றும் பதிலளித்தவிதம் ஆகியவற்றை ஒத்துழைப்பு விதமாக கருதிவிட முடியாது. சந்தா கோச்சாரை பெண் அதிகாரியே சோதனை செய்தார் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம், சந்தா கோச்சார், தீபக் கோச்சார் இருவரையும் விடுதலை செய்யலாம் என்று உத்தரவிட்டது. இருவரும் ஜனவரி 15-ம் தேதி நடைபெற இருக்கிற தங்களின் மகனின் திருமணத்தில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தா மற்றும் தீபக் இருவரும் முறையாக கைது செய்யப்படவில்லை என்று கூறி அவர்களை நீதிமன்ற காவலில் இருந்து விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும், பிணைத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும், இருவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் சந்தா கோச்சார், தீபக் கோச்சாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.