வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக உத்தராகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உத்தராகாண்ட் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. 


இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிலிபிட் பகுதியில் வெள்ளத்தில் தவித்து கொண்டிருந்த 21 பேரை இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மீட்டுள்ளது. அந்தப் பகுதியில் வெள்ளத்தின் நடுவே தத்தளித்து கொண்டிருந்த 6 குழந்தைகள், 12 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 21 பேரை இந்திய விமானப்படை மீட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது அந்த வீடியோவை பலரும் பார்த்து விமானப்படையின் செயலை பாராட்டி வருகின்றனர். 


 






அதேபோல் நேற்று உத்தராகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்க இந்திய விமானப்படை சார்பில் 3 துருவ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. அந்த ஹெலிகாப்டர்களின் உதவியுடன் 3 கிராமங்களில் சுமார் 25 பேரை விமானப்படை மீட்டு பத்திரமான இடத்திற்கு மாற்றியது. மேலும் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. 


 






இதற்கிடையே உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அத்துடன் உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீட்பு பணிகளை உடனடியாக முடக்கி விடவும் அவர் உத்தரவிட்டார். 


மேலும் படிக்க: 3 கிமீ தூரம்.. 3 நிமிடம்.. உயிரை காப்பாற்றிய போலீசாரின் அதிவேக நடவடிக்கை!! திக் திக் மொமெண்ட்ஸ்