புல்வாமா தாக்குதலை போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இந்திய விமான படையை சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். 


பாதுகாப்பு படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்குப்பதிவு நடக்குல் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலும் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


இதில், இந்திய விமான படையின் வாகனம் உள்பட இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. அதோடு, இந்திய விமான படையை சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


நடந்தது என்ன?


சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டாக அங்கு பல பயங்கவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், பூஞ்ச் பகுதியில் இந்தாண்டு நடத்தப்பட்ட முதல் பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.


ராணுவ வாகனத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


அந்த பகுதியை உள்ளூர் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஷாசிதார் அருகே உள்ள விமான தளத்திற்குள் தாக்குதலுக்கு உள்ளான வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்" என்றார்.


இந்திய விமான படை தளத்திற்கு செல்லும்போது பாதுகாப்பு கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியின் கீழ் பூஞ்ச் மாவட்டம் வருகிறது. வரும் 25ஆம் தேதி, இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.


2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 


இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிபர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த தாக்குதல் நடந்த 12 நாள்களில், 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 26ஆம் தேதி, அதிகாலை பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட்டில் இந்தியா வான்படை தாக்குதலை மேற்கொண்டது.