உத்தரபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற நகரம் ஆக்ரா. இங்கு உள்ளது சீகனா கிராமம். இந்த கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதல்வராக பெண் ஆசிரியை பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாக கஞ்சன் சவுத்ரி என்பவர் பணியாற்றி வருகிறார்.


பள்ளிக்குள்ளே அடித்துக் கொண்ட முதல்வரும், ஆசிரியையும்:


இந்த நிலையில், பள்ளிக்கு கஞ்சன் சவுத்ரி தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வருக்கும், ஆசிரியை கஞ்சன் சவுத்ரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இவர்கள் இருவர் மத்தியிலும் வாக்குவாதம் முற்றியுள்ளது.


அப்போது, திடீரென அந்த பள்ளியின் முதல்வர் ஆசிரியை கீழே தள்ளி தாக்கத் தொடங்கினார். அதற்கு அந்த ஆசிரியை தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்தார். அப்போது, அந்த முதல்வர் அவரது ஆடையை பிடித்தார். பதிலுக்கு அந்த ஆசிரியையும், பள்ளியின் முதல்வர் ஆடையையை பிடித்தார். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


வைரலாகும் வீடியோ:


அப்போது, பள்ளியின் முதல்வரை அருகில் இருந்த நபர் ஒருவர் தடுக்க முயன்றார். ஆனாலும், பள்ளி முதல்வர் அந்த ஆசிரியையின் ஆடையில் இருந்து கையை எடுக்கவில்லை. பின்னர், சக ஆசிரியைகள் இருவரையும் பிரித்தனர். இதில் இரண்டு பேரின் உடைகளும் லேசாக கிழிந்தது.






இந்த சண்டையின்போது, ஆசிரியை பள்ளியின் முதல்வரிடம் உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை அடியுங்கள். நீங்களும், உங்கள் ஓட்டுனரும் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பெற்றோர்கள் அதிர்ச்சி:


இந்த விவகாரம் தொடர்பாக அந்த முதல்வர் ஆசிரியைக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்குள்ளே இரண்டு பெண்கள் இவ்வாறு ஒருவரை ஒருவர் ஆடை கிழியும் அளவிற்கு சண்டையிட்டுக் கொண்ட சம்பவத்திற்கு பெரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மாநில கல்வித்துறையும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.