வாசிம் அக்ரம் தனது வாழ்க்கையில் ஒரு பெரிய சோகத்தை அவரது முதல் மனைவி ஹுமா 2009 இல் இறந்தபோது சந்தித்தார். இப்புகழ்பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மனைவி சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸில் தவறி விழுந்தார்.
நெஞ்சை பிளக்கும் அச்சம்பவத்தை நினைவு கூர்ந்த வாசிம், ஹுமா சுயநினைவின்றி இருந்த வேளையில், சென்னை விமான நிலையத்தில் கண்ணீருடன் நின்றுகொண்டிருந்ததாக கூறினார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம் ’சுல்தான்: எ மெமோயிர்’ (Sultan: A Memoir) என்ற தலைப்பில் சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் மிக நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தை அவர் விவரித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு எனது மனைவியின் சிகிச்சைகாக லாகூரிலிருந்து சிங்கப்பூர் சென்றபோது எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. அப்போது உடல்நிலை மோசமாகி எனது மனைவி சுயநினைவை இழந்தார். எங்களிடம் அந்நேரத்தில் இந்தியாவிற்கான விசாவும் இல்லை.நான் கண்ணீருடன் இருந்த அந்த தருணத்தில் சென்னை விமான நிலைய அதிகரிககள்தான், `உங்கள் விசா பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!' என்று கூறினார்கள். "ஒரு மனிதனாக அந்த நாளையும், சென்னையையும் என்றென்றைக்கும் என்னால் மறக்கவே முடியாது" என்று உருக்கமாக வாசிம் அக்ரம் நினைவுக் கூர்ந்துள்ளார். ஸ்போர்ட்ஸ்ஸ்டார் பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டியிதான் இதனைக் கூறியுள்ளார்.
1984 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் வாசிம் அக்ரம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். அன்றிலிருந்து 2003ஆம் அண்டு வரை சுமார் 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாட்டை தனது அபாரமான பந்துவீச்சால் கட்டிப்போட்டார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டியில் 414 விக்கெட்டுகளையும் , 356 ஒருநாள் போட்டியில் 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்ல இவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது. மேலும், டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 257 ரன்கள் எடுத்து பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் தான் ஒரு லெஜண்ட் என்பதை நினைவுபடுத்தினார்.
பிறகு 1993 முதல் 1999ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக வாசிம் அக்ரம் இருந்துள்ளார். இவரது தலைமையின் கீழ் விளையாடிய பாகிஸ்தான் அணி 1999ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது
.