மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 தேதி பிறந்தார். என்னது பிப்ரவரி 29 ஆம் தேதியா என ஆச்சரியம் ஏற்படலாம், ஆம் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29 ஆம் தேதிதான்.


4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் வருடத்தில், பிப்ரவரி 29 ஆம் தேதி வரும். மற்ற வருடங்களில் பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இடம்பெறும். இந்நிலையில் பிப்ரவரி 29 ஆம் தேதி இல்லாத வருடத்தில், மொரார்ஜி தேசாயின் பிறந்தநாளை, அவரது தொண்டர்கள் எப்படி கொண்டாடினர் தெரியுமா?


IAS தேர்வில் வெற்றி:


குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சார் பகுதியில் எளிமையான குடும்பத்தில், 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி பிறந்தார். சிவில் சர்வீஸ் தேர்வில் ( தற்போதைய IAS, IPS ) தேர்வாகி ஆங்கிலேய அரசிடம் பணியாற்றி வந்தார். பின்னர், 1930 ஆம் ஆண்டு துணை ஆட்சியர் பதவியிலிருந்து விலகி சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற ஆரம்பித்தார். காந்தியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.


உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்ற தேசாய், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952 ஆம் ஆண்டு மும்பையின் முதலமைச்சராக பதவியேற்றார். 1958 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை பிரதமர் நேருவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். 1967 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை துணை பிரதமராக பதவி வகிக்கும் போது, இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பு வகித்திருந்தார். பிரதமர் இந்திரா காந்தியினுடன் முரண்பாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.




முதல் பிரதமர்:


1975 ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவசர சட்டத்தை கொண்டு வந்தார். இதை எதிர்த்து, ஜனதா கட்சியை தொடங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில், பல கட்சிகளும் இணைந்து காங்கிரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். அதையடுத்து, 1977 ஆம் ஆண்டு அவசர சட்டம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.


1977 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சிகள் பலவும், ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து, காங்கிரசை எதிர்த்து களம் கண்டன. அத்தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியாவில் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி பொறுப்பை பிடித்தது. இதையடுத்து, சுதந்திரம் அடைந்து சுமார் 30 ஆண்டுகள் கழித்து காங்கிரசை சாராத கட்சியிலிருந்து யார் பிரதமர் என்ற கடும் போட்டியின் நடுவே மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



முக்கிய முடிவுகள்:



  • மொரார்ஜி பிரதமராக பதவி வகித்த போது, ஜனதா சாப்பாடு திட்டத்தை கொண்டு வந்தார். அதாவது அனைத்து உணவகங்களிலும், ஏழை மக்கள் உணவு அருந்து வகையில் ஒரு ரூபாயக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்க வேண்டும் என்பதாகும். இதை பின்பற்ற கூடிய உணவகங்களுக்கு மட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டது.

  • 1978 ஆம் ஆண்டு, ரூ.1000, ரூ.5,000, ரூ.10,000 நோட்டுக்கள் செல்லாது என பணமதிப்பு இழப்பு நடவடிக்கை , இவரது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  • சமூகத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களை அடையாளும் காணும் வகையில், இட ஒதுக்கீடுக்காக மண்டல் கமிசன், இவரது ஆட்சியில் அமைக்கப்பட்டது.


நேர்மைக்கு வாக்கு என்றால் எனக்கு வாக்களியுங்கள்:


பம்பாய் மாகாணத்தில் அமைச்சரக பதவி வகித்த போது, மருத்துவ படிப்பு படித்து வந்த இவரது மகள், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்வின் மறுமதிப்பீடுக்கு அனுப்ப மொராஜி தேசாயின் மகள் முடிவு செய்தார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்தார் மொரார்ஜி. நீ மறு மதிப்பீட்டில் நேர்மையாக தேர்ச்சி பெற்றாலும், என்னுடைய செல்வாக்கால்தான் தேர்ச்சி பெற்றதாக ஊர் பேசும் என தெரிவித்தார். அதையடுத்து, அவரது மகள் தற்கொலை செய்து கொண்டார்.


சுதந்திரத்துக்கு முன்பு, உள்ளாட்சி தேர்தலில், பிராமன வகுப்பை சேர்ந்த மொரார்ஜி பூனூல் அணியாததை விமர்சித்து  எதிர்க்கட்சி வேட்பாளர் பரபரப்புரை மேற்கொண்டார். நான் பூனூல் அணிவதில்லை, மற்ற ஜாதியினரைவிட பிராமணர் உயர்ந்தவரில்லை என தெரிவித்தார். பூனூலுக்குத்தான் வாக்கு என்றால், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு செலுத்துங்கள், நேர்மைக்கு வாக்கு என்றால் எனக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.


உயிரை போனாலும், புலால் உணவை உண்ண மாட்டேன் என்றும், தடுப்பூசி செலுத்தி கொள்ள மாட்டேன் என்றும், இவர் இருந்ததாக கூறப்படுகிறது.


ஒரே இந்தியர்:


இந்திரா காந்தியுடன் முரண்பட்டாலும், அவரது மகன் சஞ்சய் காந்தி மறைவு செய்தி அறிந்து உடனே சென்று இந்திர காந்திக்கு ஆறுதல் கூறினார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, பாகிஸ்தானின் உயரிய விருதான நிசான் – இ- பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர்.


இரண்டு ஆண்டு காலம் மட்டுமே ஆட்சியில் இருந்த மொரார்ஜி, 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மறைந்தார். 


இவரது பிறந்த நாள் பிப்ரவரி 29 என்பதால், பிப்ரவரி 28 நாட்கள் மட்டுமே உள்ள வருடங்களில், எப்படி கொண்டாடுவது என்று திகைத்தனர். சிலர் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியே கொண்டாடினர். சிலர் மார்ச் மாதம் 1 ஆம் தேதியே கொண்டாடினர்.


அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் நாளில் பிறந்த மொரார்ஜி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான வாழ்க்கையையும் வாழ்ந்தார்.