ஒரு சங்கிலித்தொடர்போல ஃபோன் ஒட்டுக்கேட்பை மத்திய அரசு செய்தது என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


முன்னதாக நேற்று, கொல்கத்தாவில் திரிணாமூல் கட்சியின் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் பேசிய அவர் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் மத்திய அரசை சரமாரியாக சாடினார். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.


இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, எனது செல்போன் பல ஆண்டுகளாகவே ஒட்டுகேட்கப்படுகிறது. பெகாசஸ் மட்டுமல்ல பல்வேறு உளவு மென்பொருள் கொண்டு ஒட்டுகேட்கப்பட்டிருக்கிறது. இதை மத்திய அரசு ஒரு சங்கிலித்தொடர் போல் செய்கிறது. எனது உறவினர் அபிஷேக் பானர்ஜியின் போன் ஒட்டுகேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எனது போன், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என அடுத்தடுத்து மத்திய அரசு ஒட்டுகேட்புப் பட்டியலை நீட்டிக்கொண்டே சென்றது. அவர்கள் என் போன் உரையாடல்கள் அனைத்தையும் இடைமறித்து கேட்கின்றனர். அதனை அப்படியே பதிவு செய்கின்றனர். என்னால், ப.சிதம்பரத்திடம் பேச முடியாது, மகாராஷ்டிராவின் சரத் பவாரிடம் பேச முடியாது. ஏன் டெல்லி முதல்வருடனும் பேச முடியாது. ஏனெனில் எனது போனை அவர்கள் ஒட்டுகேட்கின்றனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கண்காணிக்கும் அரசுக்கு ப்ளாஸ்டர் போடவேண்டும் என்றார்


எதிர்க்கட்சியினரை விட்டுத்தள்ளுங்கள், பாஜகவும் சொந்த கட்சியினர் மீது கூட முழு நம்பிக்கையில்லை. அவர்கள் இந்த தேசத்தையே கண்காணிப்புக்குள் வைத்திருக்க முயற்சிக்கினறனர். இது ஜனநாயகம் அல்ல. மாறாக இங்கு நடப்பது டிடக்டிவோகிரசி தான் நடக்கிறது. நான் இந்த வேளையில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருகிறேன். உச்ச நீதிமன்றம் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவர்கள் எல்லோரையும் கண்காணிப்புக்குள் கொண்டு வர நினைக்கின்றனர். ஜனநாயகத்தின் வேர் ஊடகம், தேர்தல் ஆணையம், நீதித்துறை. ஆனால், அவர்கள் இந்த மூன்று துறையையுமே கண்காணிப்புக்குள் கொண்டு வந்துள்ளனர். தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பவற்றை அறிந்து வைத்து மிரட்டிப் பணியவைக்க நினைக்கின்றனர். நான் எனது ஃபோனுக்கு ஒரு ப்ளாஸ்டர் போட்டுள்ளேன். (போனின் கேமராவில் ப்ளாஸ்டர் ஒட்டியிருந்தார்) இதே இந்த அரசாங்கத்துக்கும் ஒரு ப்ளாஸ்டர் போட வேண்டும். 


தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். நான் வருகிற 27, 28 தேதிகளில் டெல்லி வருகிறேன். என்னை சந்திக்க விரும்பும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்கலாம். நான் யாருடனும் போனில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன்” இவ்வாறு மம்தா பானர்ஜி கோப ஆவேசத்துடன் கூறினார்.