குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி நடைபெற்றது. அதைதொடர்ந்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிச.5)நிறைவடைந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி அகமதாபாத் ரானிப் பகுதியில் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த,  வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். தொடர்ந்து, அவரது தாய் உட்பட குடும்பத்தினரும் வாக்களித்தனர். பின்பு பிரதமர் மோடி தனது மூத்த சகோதரர் சோமாபாய் மோடியை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.






 


”நாட்டிற்காக தன்னை தியாகம் செய்த மோடி”


இந்த சந்திப்பு தொடர்பாக பேசிய சோமாபாய், நரேந்திர மோடியை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இருவரும் தேநீர் அருந்திக்கொண்டு குடும்ப விவகாரங்கள் குறித்து பேசினோம். ஆறு வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். எனது உடல்நலன் குறித்து மோடி விசாரித்தார், மோடியின் செயல்பாட்டால் அவரது குடும்பம் மிகுந்த பெருமைப்படுகிறது. அதேநேரம், பிரதமர் மோடி தனது குடும்பத்துடன் மிகுந்த நெருக்கமாக இருப்பது இல்லை. நாட்டிற்காக அவர் தன்னை தியாகம் செய்து கொண்டுள்ளார். 


”மோடிக்கு ஓய்வு வேண்டும்”


கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசு செய்த பணிகளை மக்களால் புறக்கணிக்க முடியாது. நாட்டுக்காக பிரதமர் மோடி நிறைய உழைக்கிறார். அவர் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். இதை சகோதரர் மோடியிடம் நான் கேட்டுக்கொண்டேன் என, சோமாபாய் தெரிவித்தார்.


எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் தேர்தல்:


இதைதொடர்ந்து, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. குஜராத்தில் 6 முறை தொடர்ந்து வென்று பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதோடு, பிரதமர் மோடி அம்மாநில முதலமைச்சராக இருந்தபோது, ஏற்பட்ட வளர்ச்சியை குறிப்பிட்டு, குஜராத் மாடலை முன்னிலைப்படுத்தியே, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. இதனால், குஜராத் சட்டமன்ற தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


மீண்டும் தேர்தலில் வென்று ஏழாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரமாக செயல்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பாஜகவை இம்முறை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க வேண்டும் என முனைப்பு காட்டியுள்ளன. இதனால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு சூழலில், 8ம் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை, அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.