ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெதமா மண்டலம் பகுதியில் இருந்து 19 பேர் கொண்ட குழு சபரிமலைக்கு சென்று வீடு திரும்பியது. இன்று (டிச.5) காலை தெனாலி பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கிய அவர்கள், லோடு வேன் ஒன்றில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். பாபட்லா மாவட்டம் வேமுரு மண்டலத்தில் உள்ள ஜம்பனி கிராமப்பகுதியில் அதிவேகமாக சென்றபோது, காலை நேரத்தில் நீடித்த அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக, வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய வாகனம், சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் 4 பேர் பலி:
வாகனம் கவிழ்ந்ததில் அதில் பயணித்த பசம் ரமேஷ் (55), பாண்டுரங்க ராவ் (40), பவன் குமார் (25), பொத்தினா ரமேஷ் (42) ஆகியோர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு விபத்தில் 18 பேர் காயம்:
முன்னதாக நவம்பர் 19 ஆம் தேதி, ஆந்திராவில் இருந்து சபரிமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள லாஹா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எட்டு வயது சிறுவன் உட்பட 18 பேர் காயமடைந்தனர்.
சபரிமலைக்கு பயண கட்டுப்பாடுகள்:
அண்மையில் கேரள மோட்டார் வாகனத்துறை வெளியிட்ட அறிக்கையில், சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பொது போக்குவரத்து மற்றும் வாடகை, சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும். ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள கூடாது. மோட்டார் சைக்கிள்களிலும் பம்பைக்கு செல்லக்கூடாது எனவும், அதுபோன்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தூக்கமின்மை அல்லது சோர்வுடன் பயணம் செய்வது ஆபத்தானது எனவும், கேரள மோட்டார் வாகனத்துறை பக்தர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
தரிசன நேரம் மாற்றம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மழை, பனி என எதையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வழக்கமாக மாலையில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், கடும் கூட்ட நெரிசல் காரணமாக கடந்த 22ம் தேதி முதல் மாலை 3 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று முதல் சிறப்பு ரயில் சேவை:
ஹைதராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு (07053) வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 9 வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் இயக்கப்படும். இந்த ரயில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஹைதராபாத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். திரும்பும் போது, வாராந்திர சிறப்பு ரயில் (07054) ஒவ்வொரு புதன்கிழமையும் டிசம்பர் 7 முதல் 2023 ஜனவரி 11 வரை அதிகாலை 2.30 மணிக்குத் தொடங்கும். இந்த ரயில் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். இந்த ரயில்கள் தமிழ்நாடு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.