கடந்த ஆண்டு குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்த போது, பிரியாவிடை உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று விளக்கம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம், காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகியதிலிருந்தே மோடி கண்ணீர் விட்ட சம்பவம் மீண்டும் பேசு பொருளாக மாறியது.
இதுகுறித்து விரிவாக பேசிய குலாம் நபி ஆசாத், "அவரது உரையின் உள்ளடக்கத்தைப் படியுங்கள். நான் மாநிலங்களவையை விட்டு வெளியேறியது குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசினார். காஷ்மீரில் நான் முதலமைச்சராக இருந்தபோது (2006ல்) குஜராத்தில் இருந்து வந்த சில சுற்றுலாப் பயணிகள் கையெறி குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி எனது அலுவலகத்திற்கு போன் செய்தார். ஆனால், எவ்வளவு கொடூரமான கொலைகள் என்பதை எண்ணி அழுது திணறிவிட்டேன். என்னால் அவருடன் பேச முடியவில்லை. எனது ஊழியர்கள் தொலைபேசியை என் அருகில் கொண்டு வந்தபோது நான் அழுவதை அவர் கேட்டார்.
அடுத்தடுத்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ள மோடி எனது அலுவலகத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தார். பின்னர், இரண்டு விமானங்களில் உடல்களையும், காயமடைந்தவர்களையும் ஏற்றிச் சென்றதை நான் பார்த்தபோது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் அலறினர். நானும் அழ ஆரம்பித்தேன். தொலைக்காட்சியிலும் வந்தது. அவர் அழைத்தார் ஆனால், மீண்டும் என்னால் பேச முடியவில்லை.
நான் மோடி ஒரு முரட்டுத்தனமான மனிதராக இருப்பாரோ என்று நினைத்தேன். அவருக்கு மனைவியோ குழந்தைகளோ இல்லாததால், கவலைப்பட மாட்டார் என்று நினைத்தேன். ஆனால், குறைந்த பட்சம், அவர் மனிதாபிமானத்தைக் காட்டினார்" என்றார்.
மே 25, 2006 அன்று ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் நான்கு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்தனர். 50 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விட்டு, அக்கட்சியிலிருந்து கடந்த வாரம் விலகினார். அப்போது, ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருந்தார். அவரின் பின்னணியில், பாஜக இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
ஆனால், பாஜகவில் சேரமாட்டேன் என திட்டவட்டமாக குலாம் நபி ஆசாத் மறுத்துவிட்டார். மேலும், அவர் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தாண்டின் இறுதியில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.