மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் (ஜே&ஜே) வியாழன் (ஆகஸ்ட் 11) அன்று அதன் டால்க் அடிப்படையிலான பேபி பவுடரின் விற்பனையை 2023 ஆம் ஆண்டில் உலகளவில் நிறுத்துவதாக அறிவித்தது. டால்க் பவுடரை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக பல பெண்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்த அறிவிப்பு வெளியிட்டது.
புற்றுநோயை ஏற்படுத்தும் கல்நார் அதில் இருப்பதாக பெண்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க மற்றும் கனடாவில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடரின் விற்பனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுத்தியது.
இருப்பினும், குழந்தைகள் உரிமைக் குழுக்கள், பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்தியாவில் டாலக் பவுடர் தொடர்ந்து கிடைப்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்கள் இந்த பிரச்சினையில் மௌனமாக உள்ளனர். இதனால், இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் பரவலான கிடைத்து வருகிறது. விற்பனைக்கு எந்த கட்டுபாடும் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், "மிக பெரிய மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் மதிப்பாய்வில் டால்க்கிற்கு பதிலாக சோளமாவை அடிப்படையாக கொண்டு பேபி பவுடரை தயாரிக்கும் முடிவில் ஓர் அங்கமாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் இந்த டால்க் பவுடரை வாபஸ் பெறும் திட்டம் இல்லை. இந்த முடிவு திரும்ப பெறப்படாது. தயாரிப்பு பாதுகாப்பானது. உற்பத்தி நிறுத்தப்படும் வரை கிடைக்கும். ஒப்பனை பொருளான டால்க் பவுடர் பாதுகாப்பு குறித்த எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
டால்க் அடிப்படையிலான ஜான்சன் பேபி பவுடர் பாதுகாப்பானது. கல்நார் இல்லாதது. புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தும் உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்களின் பல ஆண்டுகால சுதந்திர அறிவியல் ஆய்வி் பின்னால் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதை கடுமையாக சாடியுள்ள மருத்துவரும் பீடியாட்ரிக் கிரிட்டிகல் கேரின் முன்னணி ஆலோசகருமான சுரேஷ் குமார் பனுகந்தி, "உலகின் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்பட்ட வியூகத்தை இந்தியாவில் செயல்படுத்துவதில் நிறுவனம் தாமதம் காட்டுகிறது. ஒரு தயாரிப்பு உற்பத்திக்காக நிறுத்தப்பட்டால். அதை ஏன் விற்க வேண்டும், அதை ஏன் திரும்பப் பெறக்கூடாது?" என்றார்.
பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு டால்கம் பவுடரைப் பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதில் கல்நார் இல்லாவிட்டாலும், டால்க்கை சுவாசிப்பது சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.